இஸ்ரேலின் தந்துரோபாயம் மத்திய கிழக்கில் வெற்றியளிக்குமா?



பவஸ்தீனத்திற்கு வயது 64. உலக வரைபடத்தில் எகிப்து, சிரியா, ஜோர்தான், லெபனானுக்கு அருகில் சிறிய கோடொன்று இருக்குமே அதுதான் இஸ்ரேல். 64 ஆண்டுகளுக்கு முன்னருள்ள வரைபடத்தையோ, மொய்க்கும் வரைபடத்தையோ எடுத்து ஆராயாதிர்கள். ஒன்றில் இஸ்ரேல் என்ற நாடே இருக்காது. மற்றதில் மொய்த்து மறைத்திருக்கக் கூடும். இந்த சிறு புள்ளி அரசியல்தான் உலகையே ஆட்டிப்படைக்கிறது.



இங்கே பலஸ்தீனத்தை பற்றி கேட்டால் அது வாய்மொழியாக மட்டுமே இருக்கிறது. தப்பித் தவறி உலக வரைபடத்தில் தேடிவிடாதீர்கள். அங்கே பலஸ்தீனம் இருக்காது. இஸ்ரேல் என்ற புள்ளிக்குள் மேற்குக்கரை என்று ஒரு கோணத்திலும் காசா என்று மற்றொரு கோணத்திலும் எழுதப்பட்டிருக்கும். இவைகளைச் சேர்த்துத்தான் பலஸ்தீனம் என்கிறார்கள்.

ஆனால் இதனை ஒரு நாடாக சொல்ல முடியாது. வேண்டுமென்றால் நாடுபோன்றது என்று வைத்துக்கொள்ளலாம். அடிப்படை பொருளாதார கட்டமைப்பு இல்லை, அரசியலமைப்பு ஒன்றில்லை, எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்ரேலிடம் இருந்து இன்னும் சுதந்திரம் இல்லை. நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு இஸ்ரேலால் போக முடியும், கட்டிடங்களை கட்ட முடியும். இவைகள் அத்துமீறலாக கூறப்படுவதில்லை. ஒரு இறையாண்மையுள்ள நாட்டுக்குள் இவ்வாறு நடப்பதை நீங்கள் கனவிலும் பார்க்க முடியாது. பலஸ்தீனம் என்பது வெறும் பெயரளவுதான்.

பலஸ்தீனத்தில் ஏற்பட்ட வரலாற்றுத் துரோகங்கள் நீண்டது. மேற்கு நாடுகள், இஸ்ரேல் மட்டுமல்ல பலஸ்தீனத்தை ஆதரிப்பதாகக் கூறும் அயலில் இருக்கும் அனைத்து அரபு முஸ்லிம் நாடுகளும் இந்த துரோகத்திற்கு பங்குதாரர்கள்தான். இயலாமை, முதிர்ச்சியற்ற ராஜதந்திர நடவடிக்கை, ஆயுதத்தையும் மனிதரையும் மாத்திரம் வைத்துக்கொண்டு யுத்தம் செய்ய முடியும் என்று சிறுபிள்ளைத்தனமான நம்பிக்கை போன்ற அரபு நாடுகளின் செயல்களால் இந்த 64 ஆண்டுகளில் பலஸ்தீன பிரச்சினை இன்னும் சிக்கலானதே ஒழிய வேறு எதுவும் நடக்கவில்லை.

1350 ஆண்டுகள் கொண்ட அகன்ற இஸ்லாமிய சாம்ராஜ்யமான துருக்கியை மையமாகக் கொண்டு செயற்பட்ட உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் ஒரு அங்கம்தான் இந்த பலஸ்தீனம். முஸ்தபா கமால் அதாதுர்க் இந்த சாம்ராஜ்யத்தை 1924இல் கேள்வி கணக்கின்றி கலைத்துவிட்டது மத்திய கிழக்கில் தற்போது நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணமாக அமைகிறது என்பது வேறுகதை.

ஆனால் 1917 இல் பலஸ்தீனப் பகுதியை கைப்பற்றிய பிரிட்டன் அதனை .நாவில் இஸ்ரேலுக்கான நாடாக உருவாக்குவதில் சூட்சுமமாக செயற்பட்டு விட்டு 1948 மே 15ஆம் திகதி அங்கிருந்து மூட்டையை கட்டியது.

ஆனால் அதற்குள் பலஸ்தீன நிலம் குறித்து ,நா ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தது. அதன் சுருக்கம் இந்த நிலத்தில் பலஸ்தீனம், இஸ்ரேலுக்கு பாதிபாதி இடம் புனித நகர் ஜெரூசலேம் சர்வதேச கட்டுப்பாட்டில் இருக்கும் என்றிருந்தது. ஆனால் இவையெல்லாம் வெறும் ஆவணத்தில்தான் இருந்தது. இதற்கு மாறாக பிரிட்டன் வெளியேறுவதற்கு ஒரு தினத்திற்கு முன்னரே அதாவது 1948 மே 14 ஆம் திகதி இஸ்ரேல் சுதந்திர பிரகடனத்தை செய்தது.

இதற்கு எதிராக அடுத்த தினமே அயல் நாடுகளான எகிப்து, ஈராக், ஜோர்தான், சிரியா, லெபனான், பலஸ்தீன் போராளிகள் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போரை தொடுத்தது. எந்த யுத்த தந்திரமும் இல்லாமல் களமிறங்கிய அரபு நாடுகள் ஓர் ஆண்டாக நீடித்த போரில் அந்த சிறு நாட்டுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை.

இதன் பின்னர் ஏற்பட்ட யுத்த நிறுத்தம்தான் சுவாரஸ்யமானது. சம்பவம் முடிந்த பின்னர் வரும் பொலிஸ்காரர் போல் தலையிட்ட .நா இந்த மோதலுக்கு முடிவு கட்டியது. இதன்போது செய்துகொள்ளப்பட்ட யுத்தநிறுத்தத்தில் சம்பிரதாயமாக எந்தெந்த நாடுகள் எந்த இடம்வரை முன்னேறினார்களோ அதுவரை அவர்களுக்கு சொந்தமானது. இதனால் காசா வரை வந்த எகிப்து காசாவை எடுத்துக்கொண்டது. மேற்குக்கரை வரை வந்த ஜோர்தான் அதை கைப்பற்றியது. கிடைத்தது லாபம் என்று சுருட்டிக்கொண்டு அரபு நாடுகள் ஓட இஸ்ரேலுக்கு லாபம்தான். இந்த யுத்தத்தில் இஸ்ரேல் .நா வகுத்ததை விடவும் அதிக நிலத்தை கைப்பற்றியது. அவை அனைத்தையும் இஸ்ரேல் தனதாக்கிக் கொண்டது.

.நா தீர்மானித்த பாதிக்குப்பாதி நிலத்தை வைத்திருந்தால் கூட பலஸ்தீனம் என்ற நாடு கூடிய நிலப்பரப்புடன் அப்போதே உருவாகியிருக்கும். அரபு நாடுகள் இராஜதந்திரம், யுத்த தந்திரம் இல்லாமல் மூக்கை நூழைத்ததால் இருந்ததும் இல்லாமல் போய்விட்டது. இது இத்தோடு முடியவில்லை.

பின்னர் சர்வதேச கப்பல்கள் செல்லும் சுயேஸ் கால்வாயை எகிப்து மூட அதனால் அதிகம் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், பிரிட்டன், பிரான்ஸ¤டன் இணைந்து 1956இல் எகிப்து மீது நடத்திய கடுமையான தாக்குதலால் அது மீண்டும் மூக்கை உடைத்துக்கொண்டது.

அரபு நாடுகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் இஸ்ரேல் தனக்கு சாதகமாகவே மாற்றிக்கொண்டது. 1967இல் இடம்பெற்ற ஆறு நாள் யுத்தம் அல்லது மத்திய கிழக்கு யுத்தம் அரபு நாடுகளின் முதிர்ச்சி இல்லாத செயலுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. இஸ்ரேலை மீண்டும் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்த அரபு நாடுகளுக்கு 1967 ஏப்ரல் 7ஆம் திகதி இஸ்ரேல் எதிர்பார்க்காத தருணத்தில் பதில் கொடுத்தது. அன்றைய தினம் சிரிய ஆளுகைக்குட்பட்ட கோலன் குன்றுக்குள் ஊடுருவி இஸ்ரேல் பிரச்சினையை பெரிதாக்கி ஒட்டுமொத்த கோலன் பகுதியையும் கைப்பற்றியது. இதன்போது இஸ்ரேல் சிரியாவின் 7 யுத்த விமானங்களை சுக்குநூறாக்கியது.

இதனையடுத்து எகிப்து, சிரியா, ஜோர்தான், யுத்தத்தில் இறங்கியது. ஈராக், சவூதி அரேபியா, குவைட், அல்ஜீரியா ஆகிய நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக படையை அனுப்பின. 1967ஆம் ஆண்டு ஜுன் 5 முதல் 10ஆம் திகதி வரைதான் உக்கிர மோதல் நீடித்தது. இஸ்ரேல் அதற்குள் தனக்கு தேவையான அனைத்தையும் செய்துவிட்டது. அதாவது 1948இல் இழந்த காசா மற்றும் மேற்குக் கரையை கைப்பற்றியதோடு எகிப்துக்கு சொந்தமான சினாய் சிரியாவுக்கு சொந்தமான கோலன் குன்றுகளையும் ஆக்கிரமித்தது.

இந்த யுத்தத்தில் இஸ்ரேல் இழந்த இராணுவத்தின் எண்ணிக்கை வெறும் 338தான். ஆனால் எகிப்து 15 ஆயிரம் வீரர்களை பலி கொடுத்தது. ஜோர்தான் தரப்பில் 800 வீரர்களும் சிரியாவின் 2500 வீரர்களும் பலியாகினர். யுத்தம் என்பது ஆயுதம், மனிதர்களை வைத்து நடத்தும் தெருச் சண்டை அல்ல என்று அரபு நாடுகள் மீண்டும் ஒருமுறை புரிந்துகொண்டது.

இஸ்ரேல் 1967ஆம் ஆண்டு கைப்பற்றிய மேற்குக் கரை, கிழக்கு ஜெரூஸலம் பகுதிகளில் இஸ்ரேல் இன்றுவரை தன்பாட்டுக்கு யூதக்குடியிருப்புகளை அமைத்து தமது நிலப்பகுதியாக மாற்றிவருகிறது. காசாவிலிருந்து 2005 ஆம் ஆண்டு இஸ்ரேல் வெளியேறினாலும் இந்த பகுதி மீது பொருளாதார, பயணத் தடைகளை விதித்து நச்சரித்து வரும் இஸ்ரேல் நினைத்த நேரத்தில் குண்டுகளையும் போட்டு செல்கிறது.

இஸ்ரேல் யுத்தபலத்திற்கு முன்னால் மத்திய கிழக்கு நாடுகளால் இன்றும் நின்று பிடிக்க முடியாதுள்ளது. இதனால் இஸ்ரேலின் அநியாயங்களுக்கு அவைகளால் அறிக்கைகள்தான் விட முடிகிறது.

 எஸ். பிர்தெளஸ்... -
Previous
Next Post »

More News