துப்பாக்கியுடன் ஒபாமா – வெளியிட்டது வெள்ளை மாளிகை



துப்பாக்கி என்றாலே தற்போது அமெரிக்கர்களுக்கு காய்ச்சல் வருகின்றது. ஏனெனில் அடிக்கடி துப்பாக்கி சுட்டு சம்பவங்கள் நடப்பதனால், அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியில் உள்ள சாண்டிஹுக் பள்ளியில் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள் உள்பட 26 பேர் பலியாகினர். இச்சம்பவத்தையடுத்து, அமெரிக்காவின் துப்பாக்கி அனுமதி சட்டத்தை திருத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

அரசின் சார்பில் துப்பாக்கி அனுமதி தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டுவர சட்டநிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினரின் பரிந்துரையின் மீது விரைவில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது.

விவாதத்திற்கு பிறகு புதிய ஆயுதச் சட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, வேட்டை துப்பாக்கியால் சுட்டு பயிற்சி பெறுவதைப் போன்ற புகைப்படத்தை அதிபரின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி, அமெரிக்க அதிபர் ஓய்வெடுக்கும் 'மேரிலேண்ட்' பகுதியில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், போலோ டி ஷர்ட், ஜீன்ஸ், கறுப்பு கண்ணாடி, ஹெட்ஃபோன் சகிதமாக இலக்கை நோக்கி ஒபாமா துப்பாக்கியால் சுடும் காட்சி பதிவாகியுள்ளது.

துப்பாக்கி அனுமதி தொடர்பான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், 'நீங்க முன்ன பின்ன துப்பாக்கியால் சுட்டிருக்கீங்களா?' என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் யாரும் கேள்வி எழுப்பாதபடி, முன்கூட்டிய பதிலடியாக இந்த புகைப்படத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Previous
Next Post »

More News