மரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை

மரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய்
என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த போது அவரது தந்தை சொன்ன ஒரு அச்சமூட்டும் கதையை எனக்கு கூறினார்.

இந்த சம்பவம் 1942ம் ஆண்டில் கொழும்பு பாலத்துறை பகுதியில் நடந்துள்ளது. வீதியில் மின்சார விளக்குகள் பொருத்தப்படாத காலம் அது. கேஷ் விளக்குகளே அன்று வீதிகளில் வெளிச்சமூட்டிக் கொண்டிருந்தன. மின்சார விளக்குகளைப் போன்று கேஷ் விளக்குகள் பளிச்சென்று ஒளியை பரப்பாவிட்டாலும், வீதியில் நடந்து செல்பவர்களுக்கு அதுவொரு நல்ல வழிகாட்டியாக இருந்தது.

மாலை 6.00 மணியளவில் கொழும்பு கேஷ் கம்பனியின் ஊழியர் ஒருவர் ஒரு நீண்ட தடியுடன் துவிச்சக்கர வண்டியில் வந்து ஒரு சிறிய பந்தத்தை நெருப்பை மூட்டி அங்கிருந்த ஒரு கம்பியை கீழ்ப்பக்கமாக வளைத்தவுடன் கேஷ் கம்பத்திற்கு கேஷ் பிரவேசிக்கும். அதில் நெருப்புமூட்டிய நீண்ட தடியை இணைத்தவுடன் அந்த கேஷ் ஒளிவிட்டு மின்சார விளக்கைப் போன்று ஒளிபரப்பும்.

மறுநாள் காலையில் அதே மனிதர் துவிச்சக்கர வண்டியில் வந்து கேஷ் விளக்கை அணைத்துவிட்டு செல்வார். இன்று போல் அல்ல, அன்று இந்த விளக்கை ஏற்றும், அணைக்கும் பணியை கேஷ் கம்பனி ஊழியர்கள் மிகவும் அவதானமாக செய்தார்கள். ஆனால், இன்று மின்சார வீதி விளக்குகள் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

அன்று அவ்விதம் ஒரு ஊழியர் தவறிழைத்தால் அவருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதுவிடயத்தில் பொதுமக்களும் அன்று பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள். தற்செயலாக கேஷ் விளக்கை அணைப்பவர் பிந்தி வந்து விட்டால், அந்த கம்பத்திற்கு அருகில் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் அந்த ஊழியரின் பணியை சிறப்பாக செய்தும் முடிப்பார்கள்.

அன்று வீதிகளில் இரவு 8.00 மணிக்கு பின்னர் ஆள் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்துகளும் மிகவும் குறைவாகவே இருந்தன.

திரைப்பட காட்சிசாலைகளும் இரவு 7.30 மணிக்கு பின்னர் படங்களை திரையிடுவதில்லை.

இப்போது கொழும்பில் இருப்பது போன்று மனிதர்கள் வெளியிடங்களில் திரிவதும் இல்லை. பொது இடங்களில் அமர்ந்து உரையாடுவதும் இல்லை. 8.00 மணிக்குள் ஊர் அடங்கிவிடும். ஏன் இவ்வளவு நேரத்துடன் எல்லோரும் அன்று வீட்டுக்கு செல்கிறார்கள்? என்று நாம் ஆராய்ந்து பார்த்தால், அன்று மக்கள் மத்தியில் பேய்கள் பற்றிய மூட நம்பிக்கை அதிகமாக இருந்ததே இதற்கான காரணமென்று அன்றைய மக்கள் கூறுகிறார்கள்.

அடுத்த வீட்டுப் பெண் பேய் அடித்து மரணித்தாள். முன் வீட்டு இளைஞன் புளியமரத்து முனியடித்து இறந்துவிட்டான் போன்ற செய்திகள் அடிக்கடி அப்பிரதேசத்தில் கேட்டதனால், மக்கள் பேய் இருக்கிறதென்று நம்பி காலா காலத்தில் வீட்டுக்கு சென்றுவிடுகிறார்கள்.

எனது நண்பனின் பாட்டனாருக்கு அப்போது வயது 15. அவர் தாங்கள் வாழ்ந்த பாலத்துறையில் இருந்து மட்டக்குளி பிரதேசத்தில் இருந்த அவர்களின் உறவுக்காரரின் மரணத்தை அடுத்து இடம்பெற்ற எட்டு என்று தமிழர்கள் கூறும் இராப்போசன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு எனது நண்பரின் இரண்டு அண்ணன்மார்களும் அவர்களின் 40 வயதான தாய்மாமனுடன் சென்றார்கள்.

அவர்கள் சென்ற இடம் அவர்கள் வாழும் வீட்டில் இருந்து சுமார் 6 கிலோமீற்றர் தூரத்தில் இருந்தது. இதனால் இரவில் வாகன வசதி இல்லாததால் 4 பேரும் சுமார் 6.00 மணியளவில் மட்டக்குளியில் உள்ள அந்த வீட்டுக்கு நடந்தே போனார்கள்.

இறந்தவரின் 5ம் நாள் நினைவஞ்சலிக்காக அன்று அவ்வீட்டில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, முட்டை, மீன், நண்டு, இறால் போன்ற அசைவ உணவுகளும் சைவ உணவுகளும் தங்கள் துயரத்தில் கலந்து கொண்டவர்களுக்கு அன்றிரவு விருந்தாக பறிமாறப்பட்டது. இந்த இழவுச் சோற்றை உண்பவர்கள் அன்றிரவு அந்த வீட்டிலேயே தங்கி மறுநாள் காலையில் தான் செல்ல வேண்டுமென்ற சம்பிரதாயம் இருந்தது. அவ்விதம் தங்காமல் இழவு சாப்பாட்டை உட்கொண்டவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றால் அவர்களுக்கு வழியில் பேய் அடிக்கும் என்ற ஒரு மூட நம்பிக்கை இருந்தது.


மறுநாள் காலை பாடசாலைக்கு செல்ல வேண்டுமென்பதனாலும், மாமா தனது விற்பனை நிலையத்திற்கு செல்ல வேண்டுமென்பதனாலும் இந்த நால்வருக்கும் அந்த வீட்டில் அன்றிரவு தங்க முடியாதிருந்தது. இதனால், அவர்கள் மாவத்தை வழியாக மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தார்கள். மாமனார் நல்ல தைரியசாலி. அவர் எதற்கும் அஞ்சாத ஒரு வீரர். அவருக்கு பேய் இருக்கிறது என்பது நன்கு தெரிந்திருந்தாலும் அவர் பேய்க்கு அஞ்சுவதில்லை.

நீங்கள் மூவரும் என் கைகளை பிடித்துக் கொண்டு என்னுடன் வாருங்கள். உங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று என் மாமா எங்கள் மூவருக்கும் தைரியமூட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். ஒரு சுடலைக்கு அருகில் நாம் நடந்து கொண்டிருந்த போது மாமா சற்று நின்று பயப்படாதீர்கள். இதோ அந்த மதிலில் அமர்ந்திருக்கும் அந்த இராட்சத மனிதன் உங்களுக்கு தெரிகிறதா என்று கேட்டார். அவன் எங்கள் கண்களுக்கு தெரிந்ததால் நாம் ஆம் என்றோம்.

அவன் வேஷ்டியை கட்டையாக கட்டிக் கொண்டு மதிலில் மேற்சட்டையின்றி அமர்ந்து சுருட்டை புகைத்துக் கொண்டிருந்தான். பார்ப்பதற்கு ஒரு சாதாரண மனிதனாகத்தான் காணப்பட்டான். நீங்கள் மூவரும் பயந்தால் அவன் எங்களை அடித்துவிடுவான். சற்று நின்று நீங்கள் ஒவ்வொருவரும் சிறுநீரை உங்கள் கையில் கழித்து தலையைச் சுற்றி அவன் இருக்கும் திசையில் வீசிவிட்டு மூன்று தடவை துப்பிவிடுங்கள்.

அவன் இப்போது எங்களைப் பார்த்து பயந்து ஓடிவிடுவான் என்று மாமனார் கூறினார். அதைப் போலவே நாங்களும் செய்தோம்.

பின்னர் அந்த சுவரில் அந்த மனிதன் தென்படவில்லை. பயந்தபடி நாம் வீட்டுக்கு வந்து ஸ்நானம் செய்து படுக்கைக்கு போகும் முன்னர் எங்களை சந்தித்த மாமா, நீங்கள் பயந்துவிட்டீர்களா? பேய் எங்களை தாக்கும் என்பது உண்மைதான். ஆனால், நாங்கள் புத்திசாதூர்யத்துடன் நடந்து கொண்டு அதனைத் தாக்கினால் அது ஓடிவிடும்.


சிறுநீரை அதன் மீது விசி எறிந்ததனால் அந்தப் பேய் நிலைதடுமாறி பயந்து ஓடிவிட்டதென்று மாமா சொன்னார்.
Previous
Next Post »

1 Comments:

Click here for Comments
November 15, 2015 at 11:46 PM ×

இனிமேல் இரவில் பேய் உலவும் பகுதி வழியாக செல்பவர்கள் தண்ணீர் துப்பாக்கியில் சிறுநீரை பிடித்து செல்லவும்

Congrats bro R.S.Manikandan you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar

More News