30 ஆண்டுகளின் பின்னர் கோடீஸ்வரியாக வந்து அதிர்ச்சி கொடுத்த பெண்!


17 வயதில் வழிச்செலவுக்கு பணம் ஏதுமின்றி, 3 சேலைகளுடன் திருமணத்தை மறுத்து அமெரிக்கா சென்ற இந்திய பெண், 30 ஆண்டுகளுக்கு பிறகு கோட்டீஸ்வர பெண்ணாக திரும்பிவந்து குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கொல்கத்தாவில் உள்ள கட்டுப்பெட்டித் தனமான மார்வாரி குடும்பத்தை சேர்ந்தவர் சந்தா சவேரி.

இவருக்கு 17 வயதான போது ஒரு மணமகனை தேர்வுசெய்த தாயார், அவரை திருமணம் செய்துக்கொள்ளும்படி சந்தாவை வற்புறுத்தினார். தனக்கு திருமணம் செய்துக்கொள்ளும் எண்ணம் ஏதும் இப்போதைக்கு இல்லை என்று கூறிய சந்தா, வாழ்க்கையில் பெரிதாக எதையாவது சாதிக்க வேண்டும் என்னும் தனது லட்சியக்கனவை தாயாரிடம் கூறினார்.

'நான் பார்த்து வைத்திருக்கும் மாப்பிள்ளையை நீ திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால் தற்கொலை செய்துக்கொள்வேன்' என்ற தாயாரின் அன்புத்தொல்லையில் இருந்து விடுபட நினைத்த சந்தா, தனக்கு தெரிந்த அமெரிக்க நண்பர்களின் உதவியுடன் வீட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவுக்கு பிழைக்கச் செல்ல முடிவெடுத்தார்.

வழிச்செலவுக்கு கூட பணமின்றி, மூன்று புடவைகளுடன் அமெரிக்கா சென்ற சந்தா, நண்பர்களின் குடும்பத்தையே தனது குடும்பமாக கருதி, பல இடங்களில் வேலை செய்து, தற்போது அமெரிக்காவின் பிரபல சரும பராமரிப்பு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.

வெற்றிகரமான அணு மூலக்கூறு உயிரியல் ஆராய்ச்சியாளராகவும் உள்ள சந்தா 4 தயாரிப்புகளுக்கு 'பேட்டன்ட்' உரிமையாளராகவும் விளங்குகிறார். சமீபத்தில் தாய்நாடு திரும்பிய இவர், தனது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

'அமெரிக்காவுக்கு சென்ற பிறகு நான் என் உறவுகளை இழந்தேன். என் நாட்டையும் வீட்டையும் இழந்தேன். ஆனால், தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இழக்காமல், முன்னேற வேண்டும் என்ற துடிப்பில் உழைத்தேன். 30 ஆண்டுகள் உழைப்புக்குப் பின் இப்போது ஒரு நல்லநிலைக்கு வந்துள்ளேன்.

குடும்பத்தை பிரிந்து சென்றதற்காக நான் வேதனைப்படவில்லை. கவலைப்படவில்லை. மாறாக, சர்வ சுதந்திரமாக இருப்பதாகவே நான் உணர்ந்தேன். மீண்டும் ஒருமுறை இதைப்போன்று குடும்பத்தை பிரியும் சூழ்நிலை நேரிட்டால், நான் முன்னர் மேற்கொண்ட முடிவையே மீண்டும் எடுக்க விரும்புகிறேன்' என்று கூறுகிறார், சந்தா சவேரி.

முன்னேற்றத்துக்கான கனவு, தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பு இவை இரண்டும் இருந்தால் நாடு கடந்து சென்றும் தனிநபராக யாரும் சாதனை படைக்கலாம். இதில் ஆண் பெண் என்ற பாகுபாடில்லை என்ற புதிய சித்தாந்தத்தை  உருவாக்கி இருக்கும் சந்தா சவேரியின் மன உறுதியை அவரது உறவினர்கள் புகழ்ந்து பாராட்டுகின்றனர்.
Previous
Next Post »

More News