மங்கிப் போயுள்ள இந்திய, இலங்கை தந்திச் சேவை

ஹீந்தி வந்தால் இழவுச் செய்தி வரும் என்று இலங்கையிலும் இந்தியாவிலும் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் பொதுமக்கள் பயந்து நடுங்கினார்கள். அன்று தந்தி மூலமே ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மிக விரைவில் செய்திகளை அனுப்ப முடியும். அந்தளவுக்கு எங்கள் நாட்டில் தபால் திணைக்களம் மிகவும் சிறப்பான முறையில் செயற்பட்டு வந்தது.




ஓரிரு மணித்தியாலங்களுக்குள் ஒரு தந்திச்செய்தி இலங்கையின் எந்த இடத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டாலும் குறிப்பிட்ட முகவரிக்கு போய்ச் சேரும். பெரும்பாலும் மரணச் செய்திகளே தந்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அன்று தொலைபேசி இணைப்புகள் நாட்டில் குறைவாக இருந்த காரணத்தினால் தொலைபேசி மூலம் செய்திகளை அனுப்பி வைப்பது அவ்வளவு இலகுவான செயலாக இருக்கவில்லை. அதனால் நம்நாட்டு மக்கள் தந்தி மூலம் அனுப்பப்படும் செய்திகளையே நூற்றுக்கு நூறு வீதம் நம்பினார்கள்.

இலங்கையில் தந்தி சேவையை பொதுமக்கள் இன்று பயன்படுத்துவதில்லை. அதைவிட மிக விரைவில் கையடக்கத் தொலைபேசிகள் மூலமும், இணையத்தளங்கள் மூலமும் செய்திகளை விரைவில் அனுப்பி வைக்க முடியுமென்பதே காரணமாகும்.

இன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தந்தி செய்திகளை இலவசமாக அனுப்பும் சலுகை இருப்பதனால் அவர்களே தங்கள் தொகுதி மக்களுக்கு தங்களைப் பற்றிய தகவல்களை தந்தி மூலம் அனுப்பும் பழக்கத்தை கைவிடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

1990ம் ஆண்டு தசாப்தத்தில் புதிய வேலை நியமனங்கள் பற்றிய தகவல்கள் நிறுவனங்களால் தந்தி மூலமே அனுப்பி வைக்கப்பட்டன. அது போன்று எவராவது ஆஸ்பத்திரிகளில் இறந்துவிட்டால், அவரது நெருங்கிய உறவுகளுக்கு ஆஸ்பத்திரி அதிகாரிகளும், பொலிஸாரும் அந்த மரணம் குறித்து தந்தி மூலமே அறிவிப்பார்கள். தேசிய பத்திரிகைகளின் பிராந்திய நிருபர்களும் தந்தி மூலம் அன்று செய்திகளை பத்திரிகை காரியாலயங்களுக்கு அனுப்பினார்கள்.

ஆனால் இன்று அந்தப் பணியை தொலைநகல் சேவைகள், கையடக்கத் தொலைபேசிகள் போன்றவை சிறப்பாக செய்து முடிக்கின்றன.

இவ்விதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தந்தி சேவை இலங்கையிலும் கைவிடப் பட்டது. சில வருடங்களுக்கு முன்னர் தபால் நிலையங்கள் போஸ்டல் ஓடர்கள் மூலம் ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு பணம் அனுப்பும் செய்முறையும் கைவிடப்பட்டது.

தபால் திணைக்களத்தில் தந்தி அனுப்பும் பணிகளுக்கு இப்போது 1300 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு இப்போது தபால் திணைக்களம் வேறு பணிகளை வழங்கியிருக்கின்றது. தபால் திணைக்களம் கடந்தாண்டில் 27.5 மில்லியன் ரூபா நஷ்டத்தையும் எதிர்நோக்கியிருந்தது.

இலங்கையில் உள்ள அரச திணைக்களங்களில் மிகவும் பழமை வாய்ந்த அரச திணைக்களம் தபால் திணைக்களமாகும்.

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் அதாவது 1798ம் ஆண்டில் இலங்கையில் தபால் திணைக்களம் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் ஒல்லாந்தரிடம் இருந்து நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றிய பிரிட்டிஷார், தபால் திணைக்களத்தின் பணிகளை விரிவுபடுத்தி நாடெங்கிலும் தபால்களை கூடிய விரைவில் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் குதிரை வண்டிகளை அறிமுகம் செய்தார்கள்.

இந்தியாவிலும் இதே காலப்பகுதியிலேயே தபால் திணைக்களத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தொலைத் தொடர்பு மற்றும் தந்தி சேவைகளை சீராக மேற்கொள்வதற்காக 1854ம் ஆண்டில் இந்தியாவில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சேவை பொதுமக்களின் வரவேற்பை குறுகிய காலத்தில்பெற்றன. அன்றிலிருந்து தந்தி சேவை இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவிலும் பொதுமக்களின் வரவேற்பை பெற்றது. இழவுச் செய்திகள் மட்டுமன்றி புதிய நியமனங்கள், திருமண அழைப்பு போன்ற நல்ல செய்திகளும் தந்தி மூலம் மக்களுக்கு கிடைக்கப் பெற்றது. இலங்கையிலும் இந்தியாவிலும் தொலைபேசி, கையடக்கத் தொலைபேசி, இணையத்தளம் ஆகியவை பிரபல்யம் பெற்று மக்களின் வாழ்க்கையுடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்தியிருக்கின்ற காரணத்தினால் தந்தி சேவைக்கு முன்பிருந்த மவுசு இப்போது குறைந்துவிட்டது.

இதனால், எவரும் தந்தி சேவையை பொருட்படுத்து வதில்லை. இந்தியாவில் தந்தி சேவை கடந்த ஜுலை மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் நிறுத்தப்பட்டது.

தொலைபேசி, கையடக்கத் தொலைபேசிகளை போலன்றி தந்திகள் மூலம் வரும் செய்திகளை ஆவணப்படுத்தி நீண்டகாலத்திற்கு ஞாபகத்திற்கு வைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.


1798 முதல் நேற்றுவரை 215 வருடங்களாக மக்களின் வாழ்க்கையுடன் இலங்கையில் வலுப்பெற்று விளங்கிய தந்தி செய்திக்கு நாம் விடைபெறும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
Previous
Next Post »

More News