அயடின் குறைவினால் கருவிலுள்ள குழைந்தையின் மனவளர்ச்சி பாதிக்கப்படுகின்றது


அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், கருவுற்ற போது தாய்மார்களிடையே அயடின் குறைபாடு இருந்தால் அது, குழந்தைகளின் மன வளர்ச்சியைப் பாதிக்கின்றது என்பது தெரிய வந்துள்ளது. இத்தகைய சூழ்நிலை இந்தியாவில் அதிகம் காணப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.


கடந்த வியாழன் அன்று, வெளியிடப்பட்ட 'தி லான்செட்' என்ற இங்கிலாந்து நாட்டு மருத்துவ பத்திரிகையில், மனித உருவாக்கத்தில் தைராய்டு சுரப்பிகளுக்குத் தேவையான ஹார்மோன்கள், அயோடின் சத்து நிறைந்த உணவுப் பொருட்களில் இருந்தே கிடைக்கின்றது என்று கூறப்பட்டுள்ளது.

பால், பால் பொருட்கள் மற்றும் கடல் உணவுகள் போன்ற அயோடின் சத்து நிரம்பிய பொருட்களை உட்கொள்ளுவதன் மூலமே, கர்ப்பிணித் தாய்மார்கள் கருவில் உள்ள குழந்தையின் மன வளர்ச்சிக்கு உதவ முடியும் என்பதை அந்தப் பத்திரிகை தெளிவாக்குகின்றது.

சமீபத்தில் இந்திய சுகாதாரத அமைச்சகத்தினால், 324 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 263 மாவட்டங்களில் கர்ப்பிணிகளிடையே இந்தக் குறைபாடு இருந்தது தெரியவந்துள்ளது.

இந்தக் குறைபாட்டின் காரணமாகத்தான் குறைப்பிரசவம், வளர்ச்சிக் குறைபாடு, மூளைக் கோளாறு மற்றும் மூளை வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்சினைகள் தோன்றுகின்றன.

ரத்தத்தில் அயோடின் - கிரியாடினின் விகிதம் 150க்கும் மேல் இருந்தால், ஆரோக்கியமான நிலை என்று கூறும் உலக சுகாதாரக் கழகம், இந்தியத் தாய்மார்களில் 67 சதவிகிதத்தினருக்கு இதற்கும் குறைவான அளவே பரிசோதனையில் வெளிப்பட்டது என்ற தகவலையும் அளித்துள்ளது.

கருவுற்ற ஆரம்ப காலகட்டத்தில் இத்தகைய குறைபாடுகள் நீங்கும் வண்ணம் உணவில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை இந்த ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துவதாக, சர்ரே பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான மார்கரெட் ரேமன் கருதுகின்றார்.
Previous
Next Post »

More News