உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் உப்பு
‘உப்பில்லாப்
பண்டம் குப்பையிலே’ எனும் பழமொழி உப்புச்சுவையற்ற
உணவை நாம் விரும்புவதில்லை என்பதையும்
உப்புச்சுவையுள்ள உணவை விரும்பி உண்ணுகின்றோம்
என்பதையும் வெளிப்படுத்துகின்றது. ஆனால் உப்புச் சுவை
அதிகரித்த உணவைக் குப்பையில் எறிய
வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை
விஞ்ஞான அடிப்படையிலான மருத்துவ ஆய்வுகள் விளக்குகின்றன. உப்பை அளவுக்கு அதிகமாக
உண்பதால் நமது தேக ஆரோக்கியம்
கெடுகிறது. பல கொடிய நோய்கள்
நம்மைப் பீடிக்கின்றன. உப்புப்பாவனையின் அதிகரிப்பால் நமக்கு மரணம் ஏற்படுகிறது
என அண்மைக்கால மருத்துவ ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.
உலக சுகாதார தினத்தையொட்டி 07.03.2013 அன்று சுகாதார
அமைச்சிலே கருத்தரங்கு ஒன்று நடந்தது. இக்கருத்தரங்கிலே
“உப்புப்பாவனையைக் குறைப்போம். இரத்த அழுத்தத்தை ஒழிப்போம்”
என்ற தொனிப்பொருளில் கருத்தாடல்கள் இடம்பெற்றன. உப்பினால் உடலுக்கு ஏற்படும் தீய விளைவுகள் பற்றிச்
சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர். நிஹால் ஜயதிலக, அவர்களும்
டாக்டர் பி.ஞி. மேத்தா
அவர்களும் எடுத்துக் கூறிய அருமையான கருத்துக்கள்
நாம் சிந்திக்க வேண்டியவை. அதன்படி செயல்பட வேண்டியவை.
குறிப்பாக வீட்டிலே உணவையும் பண்டங்களையும் ஆக்கித்தரும் நமது தாய்மார் கவனத்தில்
கொள்ள வேண்டிய பல அம்சங்கள்
அங்கு எடுத்துரைக்கப்பட்டன.
நமது நாட்டிலே 62 சதவீதமான மக்கள் இரத்த அழுத்த
நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். இரத்த அழுத்த நோய்
பக்கவாத நோய்க்கு இட்டுச் செல்கிறது. இதற்கான
அடிப்படைக் காரணம் அதிகரித்த உப்புப்
பாவனையாகும். மேலும் 49 சதவீதமானோருக்கு மாரடைப்பு வரக்காரணம் அதிகரித்த உப்புப்பாவனை என்பதுடன் மாரடைப்பு வந்தவருள் 30 சதவீத மரணங்கள் ஏற்படுவதற்கும்
அதிகரித்த உப்புப் பாவனையே காரணம்
எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. எனவேதான் உப்புப்பாவனையைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை சுகாதார அமைச்சு முன்னெடுத்து
வருகின்றது.
ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 5 கிராம்
(1 தேக்கரண்டி) உப்புப் போதுமானது. ஆனால்
உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வுப்படி
இலங்கையர் ஒருவர் ஒரு நாளைக்கு
12.5 கிராம் உப்பை உட்கொள்கிறார். எனவே
தேவைக்கு மேலதிகமாக 7.5 கிராம் உப்பை உண்ணுகின்ற
நாம் உடல் ஆரோக்கியத்துக்கு உலை
வைக்கிறோம் என்பதே அர்த்தமாகும். சோறு
சமைக்கும் அரிசியிலே அளவான உப்பு இருக்கிறது.
ஆகவே சோற்றுக்கு உப்புப் பாவிக்கத் தேவையில்லை.
நாம் அவித்துண்ணும் கிழங்குகள், கடலைகள், பயறு மரக்கறிகளில் இயல்பாகவே
உப்புச்சத்து உள்ளது. மேலதிகமாக உப்பைப்
பயன்படுத்த வேண்டியதில்லை. சோற்றுக்கு கறுவா, இரம்பையைப் போட்டுச்
சுவையைக் கூட்டலாம். உப்புத் தேவையில்லை. கறிகளுக்கு
முடிந்தவரை உப்பைக் குறைக்க வேண்டும்.
எலுமிச்சம் புளி, பழப்புளி, கொரக்கா
மூலம் கறிகளின் சுவையை அதிகப்படுத்தலாம். உப்பைக்
குறைக்க வேண்டும். உப்புச் சேர்க்கப்பட்ட கருவாடு,
நெத்தலி போன்றவற்றை சுடுநீரில் ஊறவைத்து உப்பைக் குறைத்துச் சமைக்க
முடியும்.
தொற்றா
நோய்களான மாரடைப்பு, பக்கவாதம், உயர் குருதி அழுத்தம்,
சிறுநீரக நோய்களில் இருந்து விடுதலை பெற
உப்புப் பாவனையைக் குறைப்பதும் புகைத்தல், மதுவருந்துதல், ஹெரோயின் போன்ற போதைப் பொருள்
பாவனையில் இருந்து விலகுவதும் அவசியமானது
என வைத்திய நிபுணர்கள் தெரிவித்தனர்.
நமது சமூகத்திலே உணவில் உப்பு பாவனை
அதிகரித்த போதும் அதைக் கவனமில்லாமல்
உண்ணும் பழக்கம் நம்மிடையே வேரூன்றிவிட்டது.
வெற்றிலை, பாக்குப் பாவிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுவை அறியும் நாக்குப்
போன்ற அங்கங்கள் நுண்மையாகச் சுவை அறியும் ஆற்றலை
குறைக்கிறது. வெற்றிலை போடும் அம்மா சமைக்கும்
போது உப்பை அதிகம் பாவிக்கிறாள்.
இதனால் முழுக் குடும்பமும் உப்புக்
கூடிய உணவருந்த நிர்ப்பந்திக்கப்படுகின்றது. எனவே சமையல் செய்யும்போது
கறியின் உப்புப்பாவனையைக் கட்டுப்படுத்துவது வீட்டு எஜமானி அம்மாவின்
கடமையாகும்.
வீட்டில்
உண்ணப்படும் உணவைச் சுத்தமாகச் சமைப்பதை
மேற்பார்வை செய்யத்தவறுவதால் பாதிக்கப்படுவது வீட்டிலுள்ள அனைவருமே என்ற விடயம் கவனத்திற்
கொள்ளப்பட வேண்டும். சமையல் செய்பவரின் உடல்,
உடைச்சுத்தம், நகச்சுத்தம், பற்சுத்தம் போன்றவற்றிலும் வீட்டு அம்மா கவனஞ்
செலுத்த வேண்டும். இன்றேல் தமது பிள்ளைகளே
நோய்வாய்ப்படுவர் என்பதை வீட்டு எஜமானி
அம்மா உணர வேண்டும். சமையலை
மேற்பார்வை செய்யாமல் தொலைக்காட்சி முன் பிரசன்னமாவது குடும்பத்திலுள்ள
கணவன், பிள்ளைகளின் தேகாரோக்கியத்தை கேள்விக்குறியாக்கும் என்பதை வீட்டு அம்மா
உணர்ந்து செயல்படல் நன்று.
கடைகளிலே
பெறப்படும் தோசை, இடியப்பம், பிட்டு
போன்றவையும் ஏனைய வடை, பற்aஸ், றோல்ஸ் போன்றவற்றிலும்
சில வேளைகளில் உப்புச்சுவை அதிகரித்து காணப்படுகின்றது. கடையில் சமைப்பவர் வெற்றிலை
சப்புபவராகவும், புகைத்தல் முதலிய தீய பழக்கமுள்ளவராகவும்
அமையும்போது சிற்றுண்டிகளில் உப்புச்சுவை அதிகரிக்கிறது. உப்புச் சுவையைக் கட்டுப்படுத்தவும்,
சுத்தம் பேணிப் பொருள்களை ஆக்குவதிலும்
கடை உரிமையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
நடமாடும் வண்டிகளிலே பொரித்த உணவுப் பண்டங்கள்,
கிழங்குகள், சோளக்கதிர்கள் விற்கப்படுகின்றன.
இவற்றிலும்
உப்புச் சுவை அதிகரித்துக் காணப்படுவதை
நாம் அவதானிக்கலாம். எனவே உப்புச் சுவையைக்
குறைக்குமாறு உணவுப் பண்டம் பெறுவோர்
அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும். உப்புக்கூடிய
பண்டங்களை வாங்காது பகிஸ்கரிப்பதன் மூலம் விற்பனையாளர்களை வழிக்குக்
கொண்டுவர முடியும். விற்பனைப் பொருட்களில் ஈ மொய்க்காமல் இருக்க
கண்ணாடிப் பெட்டிகளில் பக்குவப்படுத்தி விற்பனை செய்வதைச் சுகாதாரப்
பரிசோதகர்கள் கண்காணிக்க வேண்டும்.
பாடசாலை
உணவகங்களில் உப்புப்பாவனை குறைந்த உணவை விநியோகிக்கவும்
சுத்தம் பேணவும் பாடசாலை நிர்வாகம்
உணவக உரிமையாளர்களுக்கு பணிப்புரை வழங்கலாம்.
அறிவுக்
கூர்மையும் உடலுறுதியும் தேகாரோக்கியமும் ஒழுக்க சீலமும் நல்ல
பண்புகளும் அமைந்த பிள்ளைகளை உருவாக்கும்
பிரதான பொறுப்பு பிள்ளைகளின் தாய் தந்தையருக்குரியதாகும். குறிப்பாகத் தாய்மார்
சுத்தமான சத்துள்ள உணவைப் பிள்ளைகளுக்கு வழங்க
அர்ப்பணிப்புடன் செயற்படுவதால் பிள்ளைகளை நோயிலிருந்து பாதுகாக்க முடியும். அதிகரித்த உப்புப் பாவனையால் தேகாரோக்கியத்துக்கு
ஏற்படும் கெடுதியான நோய்கள், மரணங்களை விளக்கி நாடளாவிய ரீதியில்
விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து நடைமுறைப்படுத்துவதன்
மூலம் பொதுமக்களிடையே உள்ள அதிகரித்த உப்புப்
பாவனையைக் குறைக்க முடியும்.
மேலும்
பிறக்கும் குழந்தைகளுக்கு அளவான உப்பும், அளவான
சீனியும் கொண்ட உணவைப் பழக்குவதன்
மூலம் பெரியவரான பின்னும் அவர்கள் உப்பையும் சீனியையும்
விரும்பமாட்டார்கள். இன்றே இப்பழக்கத்தைக் கடைப்பிடித்து
பெற்றோர் எதிர்கால சந்ததியை உப்பின் தீமையில் இருந்து
காப்பாற்ற முன்வர வேண்டும்.
கொடிய நோய்களான உயர்குருதி அழுத்தம், பாரிசவாதம், மாரடைப்பு, மரணம் ஆகியவற்றுக்கு காரணம்
அதிகரித்த உப்புக் கொண்ட உணவுகளே
என்பதை மாணவர் சமூகத்துக்கு விளக்குவதில்
பாடசாலையின் பங்களிப்பு முக்கியமானது. சுகாதார பாட வேளைகளிலும்
மாணவர்களுக்கான கூட்டங்களிலும் உப்பின் தீமையை ஆசிரியர்கள்
எடுத்துக் கூறுவது சிறந்த பயனளிக்கும்.
புகைத்தலால்
ஏற்படும் தீமைகளை விளக்கும் சுவரொட்டிகள்
போல உப்புக் கொண்ட பண்டங்களின்
தீமையை விளக்கும் சுவரொட்டிகளும் சமூகத்திலே பாரிய மாற்றங்களையும் தாக்கங்களையும்
ஏற்படுத்த வல்லன. எனவே சுகாதார
அமைச்சின் திட்டங்களுடன் இணைந்து உப்புப் பாவனையைக்
குறைக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோமாக.
சுஐப் எம்.காசிம்
ConversionConversion EmoticonEmoticon