வெளிநாட்டு பின்னணிகளால் குடும்ப வாழ்க்கை கட்டமைப்பில் சீர்குலைவு - ஜனாதிபதி


பீரங்கி, வெடிகுண்டுகளை விட இலங்கையில் நிலவும் குடும்பப் பிணைப்பு பலமானது எனவும் உலகமே இதனை வியப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

மேற்கத்தேய அழுத்தங்களுக்கு அடிபணிபவர்களால் நாட்டிலுள்ள குடும்பப் பிணைப்பும் எமது பெருமைக்குரிய கலாசாரமும் சீர்குலையும் அபாயம் உள்ளதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி இவற்றைக் கட்டிக்காப்பது அனைவரதும் பொறுப்பும் கடமையுமாகுமெனவும் தெரிவித்தார்.

கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் பந்துல குணவர்தன உட்பட அமைச்சர்கள், முக்கியஸ்தர்கள் கல்விமான்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி:

நாட்டின் சகல பகுதிகளிலும் அபிவிருத்திப் பணிகள் நடைபெறுகின்றன. அதற்குத் தேவையான ஆட்சேர்ப்பு நடக்கின்றது. நேற்றைய தினம் நான் தபால் துறைக்கு புதிதாக 1086 நியமனங்களை வழங்கினேன். அவர்களுக்கு அந்த நியமனத்துக்கான தகுதி, குறைந்தது 750 மணித்தியாலங்கள் அவர்கள் கணனிப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்தமையே.

இதற்கிணங்க உலகம் அபிவிருத்தியில் கட்டியெழுப்பப்பட்டு வரும் நிலையில் உருவாகும் தொழில் வாய்ப்புகளை நாம் இனங்காண்பது முக்கியம். அதற்கேற்ப எமது கல்வி முறை அமைய வேண்டும். அதனால் விரைவாக எமது கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தப்படுவது அவசியம்.

தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியான தொழில்வாய்ப்புகளுக்கு ஏற்ப எமது கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். பாடசாலைக் கல்வியில் மட்டுமன்றி பல்கலைக்கழகக் கல்வி முறையிலும் விரைவாக மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியது முக்கியமாகும்.

கடந்த காலங்களில் பிள்ளைகள் அச்சத்துடனும் ஒருவருக்கொருவர் சந்தேகத்துடனும் பாடசாலைகளில் செயற்படும் நிலை இருந்தது. அந்த நிலையை மாற்றி நாம் சகல மாணவர்களும் மக்களும் அச்சமின்றி வாழும் நிலையை ஏற்படுத்தியுள்ளோம்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கல்லூரியிலும் சகல துறைகளிலும் திறமையடைந்த மாணவர்கள் உருவாகி வருகின்றனர். அதனை நேரடியாகக் காண முடிகின்றது.

அதேபோன்று கிரிக்கெட் விளையாட்டில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவுடன் விளையாடி தோற்ற போதும், எமது மகளிர் அணி அவுஸ்திரேலியாவுடன் மோதி இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டியுள்ளது. இது பெண்கள் சகல துறைகளிலும் முன்னேறுவதைக் காட்டுகிறது.

பெண்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்ற போதும், இந்த நாட்டின் கலாசாரத்தைப் பாதுகாப்பதில் அவர்களுக்குப் பாரிய பங்கு உண்டு.

இந்த நாடு பாதுகாக்கப்பட்டுள்ளது. எமது கலாசாரமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

அதேபோன்று எம்மிடமுள்ள விசேட தன்மைதான் குடும்பப் பிணைப்பு. இலங்கையைப் போன்ற குடும்பப் பிணைப்பு உலகில் வேறு எங்கும் காண முடியாது. சர்வதேசத்தினர் இதனைக் கண்டு வியக்கின்றனர். 1815 இல் இலங்கையை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயரும் இந்த நாட்டின் குடும்ப பிணைப்புகளைக் கண்டு வியந்துள்ளனர்.

பிரட்ரிக் போன்ற ஆணையாளர்கள் சிங்களவர்களின் குடும்பங்கள் மத்தியிலுள்ள பிணைப்பு மனித குலத்தின் பெருமை மிக்கது என கூறியிருந்தனர். அன்றிலிருந்து இன்று வரை இந்த குடும்பப் பிணைப்புகள் தொடர்கின்றன. எமது நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்றன.

இந்த நாட்டில் தேசிய வரவு செலவுத் திட்டத்தை விட, நாட்டிற்கு வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிதிகளை விட இந்த குடும்பப் பிணைப்பு நாட்டிற்கான பெரும் பெறுமதி என்பதை நாம் பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறோம்.

குடும்பப்பிணைப்பு இருக்கக்கூடிய சமூகத்தில் உறுதியான பாதுகாப்பும் பராமரிப்பும் இருக்கும் என்பது எமது நம்பிக்கை. இது பெண் பிள்ளைகளுக்கு மிக முக்கியம். 16 வயதுக்கு மேற்பட்டவர்களை குடும்பங்களிலிருந்து பிரித்து வைக்கும் கலாசாரம் எம்மிடமில்லை. சில நாடுகளில் 16 வயது வந்தவுடன் வீட்டிலிருந்து வெளியே அகற்றி விடுவார்கள். எமது சமூகம் அவ்வாறன்றி பிள்ளைகளைப் பாதுகாத்து பராமரிக்கின்றது.

தாய், தந்தையர் தூரமாகும் வழக்கம் இங்கு கிடையாது. அம்மா, அப்பா மட்டுமன்றி மாமா, மாமி, தாத்தா, சகோதரர் உறவுகள் என்று இவர்கள் மத்தியில் நெருங்கிய பிணைப்பு உள்ளது.

இவற்றைச் சீர்குலைத்து சிதைக்க முயற்சிக்கும் சிலரும் உள்ளனர். இதைப் போன்ற பிள்ளைகளே இப்போது வயதான அப்பாவைக் கூட்டி வந்து களனி விஹாரையிலும் அநாதை இல்லங்களிலும் விட்டு விட்டுப் போகின்றதைக் காண முடிகின்றது. இது வெளிநாடுகளிலிருந்து தொற்றிக் கொள்ளும் பழக்க வழக்கங்கள், எமக்குள்ளும் வந்து குடும்பப் பிணைப்பை சிதைக்க முற்படுகிறது.

பீரங்கி, வெடிகுண்டுகளுக்கு மேல் இலங்கை மக்களின் குடும்பப் பிணைப்பு பலமானது. இதனை சிதைப்பது மோசமான செயல் என்பதை குறிப்பிட விருமபுகிறேன்.

பிள்ளைகள் என்னைப் பெருமைக்குரிய தந்தை (“ஆடம்பர தாத்தா”) எனக் கூறுகின்றனர். நானும் என்னை அப்படிக் கூறுவதுண்டு. நான் அப்படிக் கூறுவதறக்குக் காரணம், அன்று தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு எமது பிள்ளைகள் அபிமானத் துடன் வந்து 30 வருட பயங்கரவாதத்துக்கு வெற்றி கண்ட நாளில் எனக்கு தேசியக் கொடியை அணிவித்தனர்.

அவர்களிடம் நான் என்னை பெரு மைக்குரிய தாத்தா என்று குறிப்பிடாமல், தம்பி என்பதா, சகோதரர் என்பதா? பெருமைக்குரிய தந்தை என்றுதானே கூற முடியும். இதை பரிகசிப்பவர்கள் மேல் நாட்டு அழுத்தங்களுக்கு உட்பட்டவர்கள். அந்த கலாசாரத்திற்கு அடிமைப்பட்டவர்கள் என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

எமது நற்பழக்கங்களை, கலாசாரப் பெருமைகளை பரிகாசத்திற்கு உட்படுத்தும் இவர்களே நாம் இந்த நாட்டை மீட்க முற்பட்ட போது அதற்கு எதிராகச் செயற்பட்டவர்கள். இவர்கள் எமது கலாசார விழுமியங்களை அலட்சியப்ப டுத்துபவர்கள்.

அதனால் குடும்ப ஒற்றுமை, பிணைப்புகளை இல்லாதொழித்து, பிள்ளைகளுக்குள் அன்பை நெருக்கத்தை அழித்து மோசமான சமூகத்தை உருவாக்க முற்படும் சக்திகள் எம்மத்தியில் உள்ளன. இதிலிருந்து எமது பிள்ளைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

பராமரிப்பு, பிள்ளைகளைப் பாதுகாத்தல் எமது முக்கிய பொறுப்பாக வேண்டும். குடும்பப் பிணைப்புகளிலேயே இவை தங்கியுள்ளன.

நாம் மஹிந்தோதய பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். பாடசாலைகளில் சில குறைபாடுகள் உள்ளன.

அவற்றை நாம் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம். இந்தப் பாடசாலையின் தேவையைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் அடுத்த வருடத்திலேயே பாடசாலையில் சிறந்த கலையரங்கைப் பெற்றுக்கொடுக்க கல்வியமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.

பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசியை உபயோகிப்பது தொடர்பில் நான் குறிப்பிட வேண்டியுள்ளது.

உலகின் மிகப்பெரும் செல்வந்தரான பில்கிரேட் அவரது மகள்மாருக்கு 16 வயதிற்குப் பின்பே கைத் தொலைபேசி வழங்கியுள்ளார்.

அனைத்து செல்வங்கள் இருந்த போதும் தமது பிள்ளைகள் நல்வழியில் செல்ல வேண்டும் என்பதை இலட்சியமாக அவர் கொண்டிருந்தார்.

பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பில் எவ்வாறு அக்கறையுடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடவே நான் இதைக் கூறினேன்.

முடிந்தளவு பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு நெருக்கமாக இருப்பது சிறந்தது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ()
Previous
Next Post »

More News