இஸ்லாம் தொடர்பான எதிர்ப்பு பட தயாரிப்பாளர் தன் மீதுள்ள குற்றச்சாட்டை மறுத்தார்



இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்தை தயாரித்து பரபரப்பை ஏற்படுத்திய நகவ்லா பஸ்ஸலி நகவ்லா தம் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நீதிமன்றத்தின் முன் மறுத்துள்ளார். நன்நடத்தை விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நகவ்லா நேற்று முன்தினம் லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு வங்கி மோசடியில் சிக்கி நன்நடத்தை நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ள எகிப்தை பூர்வீகமாகக் கொண்ட கொப்டிக் கிறிஸ்தவரான நகவ்லா, அந்த விதிகளை மீறி சர்ச்சைக்குரிய திரைப்படத்தை தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர் 8 நன்னடத்தை விதிகளை மீறியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

 இதில் சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் தமது பங்கு குறித்து அதிகாரிகளுக்கு பொய் கூறியது. பொய்யான பெயரை பயன்படுத்தியது என்பனவும் உட்படுகிறது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் நீதிமன்றத்தில் மறுத்தார்.

 நகவ்லா பஸ்ஸலி நகவ்லா தயாரித்த முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் 13 நிமிட முன்னோட்டம் யூடியூப் இணைய தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதில் பலர் கொல்லப்பட்டனர்.

 இதனைத் தொடர்ந்து தலைமறைவான நகவ்லாவை கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி கைதுசெய்த அமெரிக்க பொலிஸார் அவரை பெடரர் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் அவர் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் 55 வயதான நகவ்லா, தமது நன்னடத்தை விதிகளை மீறி செயற்பட்டது நிரூபிக்கப்பட்டால் அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கக் கோரவுள்ளதாக அரச வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நகவ்லாவை பிணையின்றி தொடர்ந்தும் தடுத்துவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Previous
Next Post »

More News