புத்தள மாவட்டமும் தேசிய விளையாட்டும் ஒரு நேர்காணல்


புத்தளம் மாவட்ட தேசிய விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு இன்று (23.10.2012) அடிக்கல் நடப்படுகின்றது. இதனூடாக இம்மாவட்ட மக்களின் நீண்ட காலத் தேவைகளில் ஒன்று றிறைவேற்றப்படுகின்றது.

இது இம் மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவும், மாவட்டத்தின் விளையாட்டுத் துறை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.


அந்த வகையில் இத்தேவையை நிறைவேற்றி வைப்பதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வருகின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், புத்தளம் நகர சபைத் தலைவருமான கே. . பாயிஸ¤டன் இடம்பெற்ற நேர்காணலை இங்கே தருகின்றேன்.

கேள்வி : புத்தளம் மாவட்டத்திற்கான தேசிய விளையாட்டரங்கு தொடர்பாக சுருக்கமாக விபரிக்க முடியுமா?

பதில் : ஆம். புத்தளம் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு மாவட்டம். அதிலும் விளையாட்டுத் துறையிலும் சாதனைகள் பல படைத்த மாவட்டமும் கூட.

எமது விளையாட்டு வீரர்கள் மாவட்ட மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் மாத்திரமல்லாமல் தேசிய மட்டத்திலும் கூட சாதனைகள் புரிந்திருக்கின்றார்கள்.

இது எமது மண்ணுக்குக் கிடைத்த பெரும் கெளரவமாகும். எமது பிரதேசங்களிலுள்ள விளையாட்டு மைதானங்களில் விளையாடித் தான் அவர்கள் இச்சாதனைகளைப் புரிந்திருக்கின்றார்கள். ஆனால் அம்மைதானங்கள் போதிய வசதி வாய்ப்புகள் அற்றவை. என்றாலும் பலவிதமான அசெளகரியங்களுக்கு அர்ப்பணிப்புகளுடன் முகம் கொடுத்த படிதான் இந்த அடைவுகளை அவர்களினால் பெற்றுக்கொள்ள முடிகின்றது.

எமது பிரதேசத்தில் திறமைமிக்க நிறைய விளையாட்டு வீரர்கள் இருக்கின்றார்கள். அவர்களது திறமைகளை சரியான முறையில் திட்டமிட்டு ஒழுங்கமைத்தால் அவர்கள் மாவட்ட மட்டத்திலும், மாகாண மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் சிறந்த விளையாட்டு வீரர்களாகப் பிரகாசிப்பார்கள். இது மறைக்க முடியாத உண்மையாகும்.

அதனால் இம் மாவட்டத்திற்கென சகல வசதிகளையும் உள்ளடக்கிய விளையாட்டரங்கொன்றைப் பெற்றுக் கொள்வதற்காகப் பல மட்டங்களிலும் முயற்சிகளை மேற்கொண்டோம். அந்தடிப்படையில் இம் மாவட்டத்தின் நீண்ட காலத் தேவையை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமவுக்குத் தெளிவுபடுத்தினேன். இதன் பயனாக இவ்விளையாட்டரங்கு எமக்கு இப்போது கிடைக்கப் பெற்றிருக்கின்து.

இவ்விளையாட்டரங்கு நிர்மாணிக்கப்பட்ட பின்னர் எமது விளையாட்டுத் துறையினர் நீண்டகாலம் முகம் கொடுத்து வந்த அசெளகரியங்களும் குறைபாடுகளும் நீங்கிவிடும். அதேநேரம் மாவட்ட மட்ட, மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளை இங்கேயே நடத்துவதற்கு வாய்ப்புக் கிடைக்கும். இவ்விளையாட்டரங்கு இப்பிரதேச விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்கு அடித்தளமாக அமையும்.

கேள்வி : இந்த விளையாட்டரங்கு புத்தளத்திற்குக் கிடைக்கப் பெற ஏதுவாக அமைந்த காரணிகளைக் கூறுங்கள்.

பதில் : சகல வசதிகளையும் உள்ளடக்கிய இந்த விளையாட்டரங்கு புத்தளத்திற்குக் கிடைப்பதற்கு முதல் மூலக் காரணியே மஹிந்த சிந்தனை தேசிய வேலைத் திட்டம் தான். அத்திட்டத்திற்கு ஏற்ப எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் வாழும் மக்கள் அனுபவிக்கும் சகல வசதி, வாய்ப்புகளையும் தூர இடங்களிலும் வாழும் மக்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கில் சகல அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றார்.

அந்த வகையில் அவரது எண்ணக் கருவில் உருவான சகல வசதிகளையும் கொண்ட மாவட்டத்திற்கான தேசிய விளையாட்டரங்கு புத்தளத்திற்கும் கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

புத்தளம் மக்களின் நீண்ட காலத் தேவையை நிறைவேற்றித் தந்திருக்கும் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமவுக்கும் எமது மக்கள் சார்பாக இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கேள்வி : இவ்விளையாட்டரங்கின் உள்ளடக்கம் தொடர்பாக...

பதில் : இந்த விளையாட்டரங்கில் முதற்கட்டமாக நீச்சல் தடாகம், உள்ளக விளையாட்டரங்கு, பார்வையாளர் கூடம் (Pavilion)  பார்வையாளர் அரங்கு ஆகியவற்றை உள்ளடக்கி சகல வசதியையும் கொண்டதாக நிர்மாணிக்கப்படவிருக்கின்றது.

குறிப்பாக இந்த நீச்சல் தடாகம் 25 மீற்றர்கள் நீளத்தில் 6 வழிகளைக் கொண்டதாக அமைவுறவிருக்கின்றது. இதற்கென இரண்டரைக் கோடி ரூபாவுக்கும் மேல் செலவிடப்படவுள்ளது.

அதேநேரம் பார்வை கூடம், உள்ளக விளையாட்டரங்கு, பார்வையாளர் அரங்கு ஆகியவற்றை அமைக்கவென ஒன்பதரைக் கோடி ரூபாவுக்கும் மேல் செலவிடப்படவிருக்கின்றது. இங்கு 1200 பேர் அமரக் கூடிய வகையில் பார்வையாளர் கூடமும் (Pavilion)  சுமார் 5000 '@w அமரக் கூடிய வகையில் பார்வையாளர் அரங்கு அமைவுறும். அத்தோடு கால்பந்து, கரப்பந்து, பேஸ் போல் உள்ளிட்ட 16 விளையாட்டுக்களுக்குரிய வகையில் உள்ளக விளையாட்டரங்கு அமைவுறும்.

மேலும் 400 மீற்றர்கள் ஓடக்கூடிய ஓடு தளம் சுமார் நாலரைக் கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளன.

என்றாலும் இவ்விளையாட்டரங்கின் முதற் கட்ட நிர்மாணப்பணிகளுக்கென 18 கோடி ரூபா செலவிடப்படவிருக்கின்றது. இந்த நிர்மாணப் பணிகள் யாவும் அடுத்துவரும் ஒன்பது மாத காலப்பகுதியில் பூர்த்தி செய்யப்படும். அதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை விளையாட்டுத் துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

கேள்வி : புத்தளம் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வொன்று இடம்பெறும் இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் கூற விரும்புவதென்ன?

பதில் : இந்த விளையாட்டரங்கு கிடைக்கப் பெற்றிருப்பதையிட்டு எமது இளம் பராயத்தினர் விளையாட்டுத் துறையினர் மாத்திரமல்லாமல் முழு புத்தளமுமே பெருமைப்படுகின்றது. அவர்களுடன் சேர்ந்து நாமும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

புத்தளத்தை நாம் திட்டமிட்ட நகராக மேம்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் புத்தளம் நகரின் மையப்பகுதியில் அமைவுறும் இவ்விளையாட்டரங்கு புத்தளம் மாவட்டத்திற்கே ஒரு வரப்பிரசாதமாக அமையும். இதனை எமது இளம்பராயத்தினரும் விளையாட்டுத் துறையினரும் உச்ச அளவில் பயன்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

அதனால் இவ்விளையாட்டரங்கு புத்தளம் மாவட்ட விளையாட்டுத் துறைக்கு ஒரு திருப்புமுனையாகவும், அதன் சுபீட்சத்தின் தொடக்கமாகவும் அமையும்.

எமது மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள குறைகளையும், தேவைகளையும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவற்றை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றேன். அந்தடிப்படையிலேயே இவ்விளையாட்டரங்கு இப்போது எமக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

ஏற்கனவே எமது பிரதேச பாடசாலைக் கல்வி மேம்பாட்டுக்கென ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியையும் உயர் கல்வி மேம்பாட்டுக்கென திறந்த பல்கலைக் கழகத்தின் கிளையொன்றை யும் பெற்றுக்கொடுத்திருக்கின்றேன். எமது பிரதேச மக்கள் சீராக குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன்.

புத்தளத்தினதும், புத்தளம் வாழ் மக்களினதும் சுபீட்சத்தையும், மேம்பாட்டையும் இலக்காகக்கொண்டு தான் எல்லா வேலைத் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றது. அவற்றின் மூலம் எமது மக்கள் உச்ச பயனைப்பெற வேண்டும் என்பதே எமது ஒரே எதிர்பார்ப்பாகும்.
Previous
Next Post »

More News