முஸ்லிம்களை வேதனைக்கு உள்ளாக்கும் ஜனாஸா எரிப்பு நடவடிக்கை

-புருஜோத்தமன் தங்கமயில்


கொரோனா
வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், அவர்களின் மார்க்க நம்பிக்கைக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் எதிராக, அரசாங்கத்தால் தொடர்ந்தும் தகனம் செய்யப்பட்டு வருகின்றது.

 

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களைத் தகனம் செய்வது போல, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அடக்கம் செய்வதாலும் தொற்றுக்கான அச்சுறுத்தல் இல்லைஎன்று, உலக சுகாதார நிறுவனம் ஏற்கெனவே அறிவித்து இருக்கின்றது.

 

அப்படியான நிலையில், இலங்கையில், முஸ்லிம்களின் ஜனாஸாக்கள், பலவந்தமாகத் தகனம் செய்யப்படுகின்றன. அண்மையில், 20 நாள்களேயான சிசுவொன்றின் ஜனாஸாவும், கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி, வலிந்து தகனம் செய்யப்பட்டது.

 

இவ்வாறான நிலையில், தம்முடைய மார்க்க நம்பிக்கையையும் அடிப்படை உரிமைகளையும் கோரி, ஜனநாயகப் போராட்டங்களை முஸ்லிம் மக்கள் ஆரம்பித்து இருக்கிறார்கள். குறிப்பாக, வெள்ளைத் துணிகளை (கவன்) கட்டி, எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.

 

அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்றால் தாம் மரணிக்க நேர்ந்தால், தங்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி கிடைக்கும் வரையில், பொறுப்பேற்க வேண்டாம் என்றும் குடும்பத்தாரிடமும் சமூகத்திடமும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். 

 

தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான நிலைப்பாடு என்பது, பௌத்த சிங்கள பேரினவாதத்தின் அடிப்படைகளாகக் கட்டி வளர்க்கப்பட்டு இருக்கின்றது. கடந்த பல தசாப்தங்களாக, தமிழ் மக்களைப் பிரதான எதிரிகளாக்கிக் கொண்டு சுமந்த பௌத்த சிங்களத் தேசியவாதம், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான கடந்த ஒரு தசாப்த காலமாக, முஸ்லிம்களைப் பிரதான எதிரியாக்கிக் கொண்டிருக்கின்றது.

 

 குறிப்பாக, முஸ்லிம்களின் மார்க்க உரிமைகளில் தலையீடுகளைச் செய்வதன் மூலம், அவர்களின் ஆன்மாக்களை உரசும் வேலைகளைச் செய்ய ஆரம்பித்திருக்கின்றது. அதன்மூலம், முஸ்லிம்களுக்குள் இருந்து தீய சக்திகளை உருவாக்கி, அதைக் காட்டி, முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அடக்கி ஒடுக்கும் எண்ணத்தை, பௌத்த சிங்களத் தேசியவாதம் வெளிப்படுத்துகின்றது.

 

ராஜபக்ஷர்கள், போர் வெற்றிவாதத்தை மூலதனமாக்கிக் கொண்டு, 2010 ஜனாதிபதித் தேர்தலை  வென்று, இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தை அமைத்தது முதல், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தரப்புகளுக்கான களம் அமைக்கப்பட்டது.

 

குறிப்பாக, பொதுபல சேனா என்கிற அமைப்பு அதற்காகவே ஸ்தாபிக்கப்பட்டு இருந்தது. அந்தக் காலத்தில், பள்ளிவாசல்களும் முஸ்லிம்களின் வர்த்தக நிறுவனங்களும் தாக்கப்பட்டன, அளுத்கம உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்களைக் குறிவைத்து, கலவரங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

 

அப்போது, ராஜபக்ஷர்களின் அரசாங்கத்தில், நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் இருந்தார். இன்னொரு முக்கிய தலைவரான ரிஷாட் பதியுதீன், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்தார். ஆனால், முஸ்லிம்களுக்கு எதிரான எந்தத் தாக்குதலையும், இவர்களால் நிறுத்த முடியவில்லை.

 

மாறாக, ஐக்கிய நாடுகளை நோக்கி ஓடிச் சென்று, முறையிடும் நிலையொன்று ஏற்பட்டது. நாட்டின் நீதி அமைச்சராக, நீதித் துறையின் செயற்பாடுகள், வெளிப்படைத் தன்மைகள் பற்றி, இலங்கையின் சார்பில் சர்வதேச அரங்கில் பேச வேண்டிய ஹக்கீம், தான் சார்ந்திருக்கும் சமூகத்துக்கு எதிராக நிகழ்த்தப்படும் அடக்குமுறைகள் குறித்து, சர்வதேசத்திடம் முறையிட வேண்டிய வந்தது. இந்நிலைமை எதைச் சாட்சிப்படுத்துகின்றது என்றால், ராஜபக்ஷர்களின் ஆட்சியில், முஸ்லிம் அமைச்சர்கள் எவ்வாறான இடத்தில் வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதையாகும்.

 

நல்லாட்சிக் காலத்துக்குப் பின்னரான ராஜபக்ஷர்களின் இன்றைய வருகை என்பது, இனவாத -மதவாத அடிப்படைகளைத் தீயாக எரிய வைத்துக் கொண்டு நிகழ்த்தப்பட்டது. குறிப்பாக, நல்லாட்சி அரசாங்கம் நாட்டைப் பிரித்து, தமிழ் மக்களிடமும் முஸ்லிம் மக்களிடமும் வழங்கப் போகின்றது என்று பெரும் பிரசாரம் ராஜபக்ஷர்களால் தென் இலங்கை பூராவும் முன்னெடுக்கப்பட்டது.

 

அதற்கு, சஹ்ரான் போன்ற மூளை மழுங்கிய குழுக்களின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், பெரும் உதாரணமாகக் காட்டப்பட்டது. ஒரு கட்டத்தில் தங்களை லிபரல்வாதிகளாக முன்மொழிந்த தென் இலங்கை சக்திகள் பலவும், முஸ்லிம்களுக்கு எதிரான நிலைபாட்டின் பக்கம் நகர்ந்தன. குறிப்பாக, சஹ்ரானின் தாக்குதலைச் சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது ஆழமானகசடுகளைக் கொட்டித் தீர்த்தன. அதை, ராஜபக்ஷர்களுக்கான வெற்றிக்கான வாய்ப்பாகவும் உருவாக்கின.

 

ராஜபக்ஷர்களின் தற்போதைய வருகையின் போது, முஸ்லிம்களை ஆட்சியில் பங்காளி ஆக்குவதில்லை என்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள். குறிப்பாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் முஸ்லிம் தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதில் கவனமாக இருந்தார். அதனால்தான், தனக்கான கையாளாக ஆரம்பம் முதலே, அலி சப்ரியை அவர் அடையாளப்படுத்தினார்; அலி சப்ரிக்கு நீதி அமைச்சுப் பதவியும் அளித்தார்.

 

பல சிரேஷ்ட தலைவர்கள் இருக்கின்ற நிலையில, தேசிய பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் வழங்கி, முக்கிய அமைச்சுப் பதவியையும் எப்படி அலி சப்ரிக்கு வழங்க முடியும் என்று பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்கள் எதிர்ப்பு வெளியிட்டார்கள். ஆனால், அதையெல்லாம் ஜனாதிபதி கோட்டா கண்டுகொள்ளவில்லை.

 

ஏனெனில், தன்னுடைய இனவாத- மதவாத அரசியலுக்கான ஒரு தூணாக, முஸ்லிமாக அடையாளப்படுத்தப்படும் அலி சப்ரி இருப்பார் என்று கோட்டா நம்பினார். அவரின் நம்பிக்கையை அலி சப்ரி இன்று வரையிலும் பொய்ப்பிக்கவில்லை. ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும், ஜனாஸாவை அடக்கம் செய்வதற்கான  உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்க, அலி சப்ரியோ ராஜபக்ஷர்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்தும் வேலைகளில் குறியாக இருக்கின்றார்.

 

இன்னொரு பக்கம் முஸ்லிம் அரசியல் தலைமைகள், கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அடக்கப்படும் சமூகங்களுக்கு, அரசியல் தலைமைத்துவம் வழங்கும் தரப்புகள், சுயநல திட்டங்களின்றி இயங்க வேண்டும்.

 

ஆனால், இலங்கையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் தலைமைத்துவங்கள், சுயநல பக்கங்களுக்கு அப்பால் நின்றோ, திட்டமிட்ட செயற்பாடுகளின் வழியாகவோ, தங்களை அடையாளப்படுத்துவதில்லை. அதிலும், முஸ்லிம் தலைவர்கள், அதிகமான தருணங்களில் ஆட்சியிலுள்ள அரசாங்கங்களின் பங்காளிகளாக இருப்பது மாத்திரமே, தமது சமூகத்தைப் பாதுகாக்கும் என்கிற விடயத்தைப் பெரிய உண்மை மாதிரி நம்ப வைக்க முயல்கின்றனர்.

 

ராஜபக்ஷர்களின் முதல் ஆட்சிக்காலத்தில், முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் பங்காளிகளாகவே இருந்தார்கள். ஆனால், அப்போதும் முஸ்லிம் மக்கள் மீது, இனவாதத் தீ பரப்பப்பட்டு, அடக்கப்பட்டார்கள். அப்போது, அரசாங்கத்தோடு இணங்கி இருத்தல் என்கிற விடயம், முஸ்லிம் மக்களைக் காப்பாற்றவில்லை. வேணுமென்றால், முஸ்லிம் தலைவர்களின் தனிப்பட்ட நலன்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கலாம்.

 

தற்போதும், ராஜபக்ஷர்களோடு இணங்கியிருத்தலே தம்மைப் பாதுகாக்கும் என்கிற கட்டத்தை, நிராகரிக்கப்பட முடியாத உண்மை மாதிரி, முஸ்லிம் தலைவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், அவர்களை ஆட்சி அதிகாரத்தின் பங்காளிகளாக உள்வாங்குவதற்கு, ராஜபக்ஷர்கள் தயாராக இல்லை.

 

வேணுமென்றால், எங்களுக்குத் தேவையான தருணத்தில், நீங்கள் நாடாளுமன்றத்தில் வாக்குகளை அளித்துவிட்டு, ஒதுங்கிக் கொள்ளுங்கள்என்பதுதான், அவர்களின் நிலைப்பாடு.

 

முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகள், கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இன்றைய நாள்களில்தான், எதிர்த்தரப்பில் இருந்த (ராஜபக்ஷர்களால் சேர்த்துக் கொள்ளாப்படாத) முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர், 20ஆவது திருத்தச் சட்டத்துக்கும், வரவு-செலவுத் திட்டத்துக்கும் ஆதரவாக வாக்களித்தார்கள். ஆதரவாக வாக்களிப்பதற்கு முன்னராவது, ஜனாஸா அடக்கம் பற்றிய விடயத்தையாவது, அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கையாகப் பேசியிருக்கலாம். ஆனால், அதைக் குறித்து, எந்தவித கொள்கை நிலைப்பாடையும் எடுக்காமல், ஆதரவாக வாக்களித்து இருக்கிறார்கள்.

 

இன்றைக்கு ஜனாதிபதி கோட்டா, முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் அடக்கம் செய்வது பற்றிக் கவனம் செலுத்துகின்றாராம். ஆனால், அந்த விடயம் பற்றி, அமைச்சரவையில் பேசப்படவில்லை என்கிறார் அரசாங்கத்தின் பேச்சாளர்.

 

விஞ்ஞான ரீதியான அணுகுமுறைகள் சார்ந்து சிந்தித்துத்தான், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் உடலங்களை அடக்கம் செய்வதற்கு, எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவதாக அரசாங்கம் கூறியிருக்கின்றது. அப்படியானால், இலங்கையின் நில மட்டத்தையும் விடக் குறைவான நிலமட்டத்தைக் கிட்டத்தட்ட கடல் மட்டத்தோடு கொண்டிருக்கின்ற மாலைதீவு, எப்படி கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான சரியான இடம் என்று தெரியவில்லை. அத்தோடு, இங்கிருந்து ஜனாஸாக்களை, மாலைதீவுக்கு எப்படி கொண்டு செல்வது, அதற்கான செலவை யார் செய்வது என்பது பற்றியெல்லாம், கோட்டாவும் அவரது அரசாங்கமும் கவலைப்பட்டது மாதிரியே தெரியவில்லை.

 

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலங்களை அடக்கம் செய்ய முடியும் என்று சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையொன்றை தொடர்ந்தும் நிராகரிப்பதென்பது, திட்டமிட்ட ரீதியாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கையாகவே கொள்ள வேண்டும்.

 

அதுவும், அவர்களிடம் எந்தவித ஆலோசனைகளையும் கோராது, மாலைதீவில் அடக்கம் செய்வதற்கான பேச்சுகள் என்பது, சொந்த நாட்டில் வாழ்ந்து மரணிக்கும் உரிமையை மறுப்பதாகும். அதை ராஜபக்ஷர்கள் தெளிவாகச் செய்கிறார்கள். ஏனெனில், அவர்கள் இனவாதத்தின் மீது ஏறிநின்று ஆட்சி நடத்துகிறவர்கள் ஆவர்.


Previous
Next Post »

More News