நோன்பு என்றால் என்ன? - சிறுகதை

மகன் பாரிஸ், பொடியனுகளோடு சேந்து விளையாடப் போவாம எனக்கு ஒதவி ஒத்தாசை செஞ்சாத்தான் இந்த நோம்புப் பெருநாளைக்கி புது உடுப்புக்களாச்சும் வேங்கலாம் என்று அன்று காலையிலேயே சொல்லி விட்டாள் கதீஜா.

இந்த காலம்பொறயிலேயே இப்படிச் சொல்லீட்டீங்களே உம்மா. பள்ளிக்குடமெல்லாம் லீவு, ஒழுங்கா சாப்பாடும் கெடையாது என்று சொன்னான் தாயார் சொன்னதைக் கேட்டு.

எனக்கும் புரியிது மகன் கடசி ஒரு நாளக்கி 2500 அல்லது 3000 பீடிகளாவது சுத்திக் குடுத்தாத்தான் நம்மட கையிலே கொஞ்ச நஞ்சமாவது காசிவந்து தங்கும். உன்ட ராத்தாமார் ரெண்டுபேரும் சேந்தும் பீடி சுத்துறாங்க. நீ சுத்திபோடுற பீடிகளுக்கெல்லாம் இந்த சிவப்பு நூலாலே சுத்திக்கட்டி கூடையிலே போட்டா போதும் மகன்.

பீடி இலையில் புகையிலைத்தூளை நிரப்பி சுருட்டி மடித்து, அதில் தங்கள் நகங்களினால் குறியிட்டு பாரிஸிடம் தள்ளி விடுகிறார்கள் மூன்று பேரும். இதில் நல்ல அனுபவமுள்ள பாரிஸ் விரைவாக சிகப்பு நூலால் கட்டியவண்ணம் கூடையிலே போட்டுக் கொண்டே இருந்தான்.

கதீஜாவினதும் மகள்மார் இரண்டு பேரினதும் புடவையிலும், தரையிலும் கத்திரிக்கோலால் துண்டிக்கப்பட்ட பீடி இலையின் கழிவுகள் சிதறிக்கிடந்தன. பீடிப் புகையிலையின் சக்திவாய்ந்த நெடி அவ்விடமெங்கும் செறிந்திருந்தது. வேகமாக நடைபெறும் இந்த வேலையை சற்றுத்தூரத்திலிருந்து பார்த்தால் இயந்திரமொன்று இயக்கப்படுவது போலத்தோன்றும்.

கதீஜா இடையிடையே இருமுவாள். மகள் மாரும் இருமிக் கொள்வார்கள். புகையிலைத்தூளின் நெடி அப்படிஅவர்களைச் செய்ய வைக்கின்றது. கதீஜா இடையிடையே தன் இரண்டு கால்களை சேர்த்தும், சில சமயங்களில் காலைமாற்றி சம்மணமிட்டு உட்கார்ந்து கொள்வாள். தொடர்ந்து குந்திக் கொண்டு வேலை செய்வதால் கதீஜாவுக்கு இடுப்பில் வலி எடுக்கும். அந்த வேளைகளில் சிறிது நிமிர்ந்தும் குனிந்தும் உட்கார்ந்து கொள்வாள்.

உடலின் சோர்வையும் நோன்புக் களைப்பையும் மறந்து வீட்டிலேயே தங்களின் ஜீவனோபாயத்திற்காக இத்தொழிலை தாயும் மகளும் செய்து வந்தார்கள். தந்தை முனீர் வயல் வேலைக்கு உழவு இயந்திரமொன்றில் செல்லும் போது அது தடம் புரண்டதால் இவர் வெளியே தூக்கியெறியப்பட்டார்.

வைத்தியசாலையில் போதிய சிகிச்சையளிக்கப்பட்டும் கடினமாக வேலைகள் எதுவும் செய்ய வேண்டாமென்று டொக்டரும் சொல்லிவிட்டார். முதலிரண்டு பிள்ளைகளும் குமர்கன், பாரிஸ்தான் கடைக்குட்டி 10 வயது. இவர்களின் நிலைமையை அறிந்து பீடி விநியோகம் செய்யும் கம்பனியொன்று இவ்வேலையை ஒப்படைத்தது.

ஏதோ கடன்படாமலும் வருமானத்திற்கேற்ப சாப்பிட்டும் வாழ்க்கையைக் கடத்திவந்தார்கள் முனீர் குடும்பத்தினர். தினமும் மாலை 6 மணிக்கு பீடிசுற்றுவதற்கான இலைகள் புகையிலைத்தூள், சிவப்பு நூல்கட்டை என்பவைகளைக் கொடுத்துவிட்டு சுற்றப்பட்ட பீடிகளை சேகரித்துச் செல்வார்கள்.

பீடி சுற்றுபவர்களும் 25 பீடிகள் கொண்ட கட்டுக்களை வைத்திருப்பார்கள். அதனால் சுற்றப்பட்ட பீடிகளின் எண்ணிக்கைகளை அறிந்து அதற்காக கூலியையும் உடன் கொடுத்துச் செல்வார்கள்.

நோன்புக் காலமாக இருப்பதால் பகல் மாலை நேரத்தொழுகை நேரங்களில் தொழுது கொள்ளும் நேரம் தவிர்ந்த மற்ற நேரங்கள் முற்றாக பீடி சுற்றும் வேலையிலேயே மூவரும் ஈடுபடுவார்கள். மாலை 5 மணியானதும் நோன்பிற்கான ஆயத்தங்களைச் செய்ய இவ்வேலையை நிறுத்திக் கொள்வார்கள்.

நோன்பில்லாத காலங்களில் கடைசி 80, 100 பீடிக்கட்டுக்களாவது கட்டுவார்கள். இந்த நோன்பு காலத்தில் சமையல் வேலைகள் சற்று குறைவாகவே இருக்கும், அதனால் மேலதிகமாக 30 அல்லது 35 பீடிக்கட்டுக்களையாவது கூட்ட வேண்டு மென்பதுதான் கதீஜாவின் எண்ணமெல்லாம்.

பீடிசுற்றும் வேலை மும்முரமாய்ப்போய்க் கொண்டிருந்தது. அப்போது விசில் அடிக்கும் சப்தமொன்று கேட்டது. பாரிஸின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது. மெல்ல எழுந்து தட்டிக்கதவு வழியாக வெளியே எட்டிப்பார்த்தான். மீண்டும் இரு தடவைகள் விசில் சப்தம் கேட்டது.

பாரிஸின் நண்பர்கள் விளையாட அழைக்கத்தான் விசில் சப்தம் இட்டுக்காட்டுவார்கள். இச்சப்தம் கேட்டால் 10 வயது பாரிஸை வீட்டில்வைத்து வேலை வாங்குவது இயலாதென்பது கதீஜாவுக்கு நன்றாகவே தெரியும். அவனது நிலையை அறிந்து தாயும். சகோதரிமார்கள் இருவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

கதீஜாவும் பாரிஸைப் பார்த்து, மகன் நான் இதோ நறுக்கி வெச்சிருக்கும் இலையிலே புகையிலைத்தூளை வெச்சி நிரப்பி சுருட்டி வெய்க்கிறேன். ஓரளவாவது அவைகளுக்கு இந்தச் சிகப்பு நூலைக்கட்டி வெச்சிட்டு நீ விளையாடப்போ மகன் என்றாள் தாயார் கதீஜா.

மிக விரைவாக அந்த இடத்தை விட்டும் போக எண்ணியவனாக பாரிஸ் தலையை ஆட்டிவிட்டு, சீக்கிரமாக பீடியெல்லாம் சுருட்டிச் சுருட்டித் தாங்கம்மா என்று அவசரப் படுத்திக் கொண்டே இருந்தான் அவனும், புன்னகை பூத்தவாறு கதீஜாவும் மகனே ஒழுங்கா இவைகளைச் செய்யாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா!

தெரியாதே, சொல்லுங்களேன் உம்மா பீடிக்கொம்பனி முதலாளி அப்படியே நசுக்கி தூர வீசி எறிஞ்சிடுவார் மகன் அப்படிச் செஞ்சா நாம எப்படியடா சாப்பிடுவது. புது உடுப்பெல்லாம் எடுக்கிறது என்றாள் தாயார் கதீஜா.

கடின வேலைகள் செய்ய இயலாத முனீரின் மனைவி மக்களுக்கு சிறு சிறு உதவிகளைச் செய்து வருவார். வெளியில் இருந்து வந்தவரை பீடி சுற்றிக்கொண்டிருந்தவர்கள் எவரும் அவதானிக்கவில்லை. சட்டையைக் கழற்றிவிட்டு பாயைஎடுத்து விரித்து அதிலமர்ந்து பட்டையொன்றால் விசிறிக் கொண்டிருந்தார்.

பெருமூச்சை விட்டவாறு யா அல்லாஹ் என்ன வெயில் எனக்கு இந்த முறை நோன்பு பிடிப்பது சிரமமாகத்தான் இருக்கும் போல் தெரிகிறது. இந்தப் புழுக்கம் கொளுத்தும் வெயில். இதனால் இந்தச்சிறிய மரக்கறி கொண்ட சொப்பிங்பேக்கையும் என்னால் தூக்கிவர கஷ்டமாய் இருக்கே!

இன்றைக்கு நோன்பு மூன்றாகுது இன்னும் இருபத்தாறோ, இருபத்தேழோ நோன்பு இருந்தாக வேண்டுமே! நான் எப்படித்தான் சமாளிக்கப் போறேனோ என்று தனக்குள் பேசிக் கொண்டார் முனீர். வேலையில் ஈடுபட்டிருந்த மகனிடம் பாரிஸ் விடியக்காலம் வெச்ச அரிசிக்கஞ்சி கொஞ்சம் இருக்கு, அதைச் சாப்பிட்டிட்டு நீ விளையாடப்போ. இனி உன்னை வெச்சிருக்க ஏலாது என்றாள் கதீஜா.

சற்று நேரத்தில் தாயார் சொல்லியபடி அரிசிக்கஞ்சியை அருந்திவிட்டு சிட்டாய்ப் பறந்தான் பாரிஸ். அதனைக் கண்ணுற்ற முனீர் மகன் செய்து கொண்டிருந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார்.

நோன்பு நோற்காத சிறுவர்கள் சுலைமான் ஹாஜியாரின் தென்னந்தோப்பிலுள்ள வெற்றிடத்தில் கிரிக்கட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பாரிஸ் தாமதமாகச் சென்றதினால் விளையாடும் சந்தர்ப்பம் கிட்டவில்லை.

பத்துச் சிறுவர்கள் ஏற்கனவே விளையாட வந்ததினால் ஐவைந்து பேர்களாக இரு கோஷ்டிகள் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். பாரிஸ் எவ்வளவோ கெஞ்சியும் விளையாட்டில் சேர்ந்து கொள்ள வாய்ப்புக் கிட்டவே இல்லை.

இரு கோஷ்டித் தலைவர்களும் சுணங்கி வந்தால் இப்படித்தான் நடக்கும். எங்களில் விளையாடும் ஒருவன் விட்டுத்தந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள். நோன்பு நோற்காத சிறுவர்கள் இந்த விளையாட்டில் உற்சாகம் ஏற்படவே எவருக்கும் விட்டுக் கொடுக்கும் எண்ணம் ஏற்படவே இல்லை. மனமுடைந்த பாரிஸ் அவ்விடத்தை விட்டு அகன்று தன் பாடசாலை நண்பன் பர்ஸான் வீட்டை நோக்கிச் சென்றான்.

அங்கே அவன் நோன்பு நோற்றவனாய் திருக்குர் ஆனை மெல்ல மெல்ல ஓதிக் கொண்டிருந்தான். இவனுடைய தந்தை பள்ளிவாயல் கத்தீப் (தொழுகை நடத்துபவர்) மனாசிர் மெளலவியாவார். எதுவும் பேசாமல் பர்ஸானின் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டான் பாரிஸ்.

இதனை அவதானித்த பர்ஸான் குர்ஆனை அடையாளமிட்டு மடக்கி வைத்தபின் வாடா பாரிஸ் எங்கிருந்தடா வாராய் நீ, எப்போதும் போல் நம்ம பொடியன்களோடு சேர்ந்து விளையாடப்போனேன். என்னச் சேத்துக் கொள்ள மாட்டேனென்னுடான்கள்டா பர்ஸான். எல்லாம் நன்மைக் குத்தான்டா அதையிட்டு நீ வருத்தப்படாதே!

பர்ஸான் நீ என்ன சொல்றாய், இந்த ரமழான் மாசம் சும்மா வீணா விளையாடுற மாசமே இல்லேடா! ஒரு வருசத்திலே அல்லாஹ் இந்த றமழான் மாசத்தைத்தான் மிகச்செறப்பாக்கி வெச்சிருக்கான் நோம்பு. வெய்க்கச் சொல்லி இருக்கான் 10வயதிலிருந்து எல்லா முஸ்லிம் ஆம்பள பொம்பளைங்க எல்லாரையும். அப்படியா பர்ஸான்.

இன்னும் இருக்கிடா, புனித அல்குர்ஆன் இறக்கிய மாசம் மத்தது லைலத்துல் கத்ர் என்னும் இரவை நோம்பு 21 இல் இருந்து 29 வரையிலான ஒத்தப்படை இரவிலே இறக்குகின்றானாம். அல்லாஹ் அந்த நேரம் எந்தவொரு நோம்பாளியும் கேட்கும் துவாப்பிரார்த்தனையை அல்லாஹ் நிறைவேத்தி, அந்நோம்பாளியின் பாவங்களை மன்னித்தும் விடுகின்றானாம்.

நாமெல்லாம் 10 வயது சிறுவர்கள் கட்டாயமாகக் தொழவேணும், நோம்பும் பிடிக்க வேணும் டா அல்லாஹ்வுக்காக வேண்டி பகல் முழுவதும் பட்டினி இருந்து தியாகம் செஞ்சா இவர்களுக்காக விஷேசமான சுவர்க்கத்தையும் வெச்சிருக்கானாம் அந்த மகாவல்ல நாயன்.

இதெல்லாம் எப்படிடா உனக்குத் தெரியவந்திச்சி பர்ஸான். நீ இந்த வெள்ளிக்கிழமை ஜூம்மாத் தொழுகைக்கு வந்திருந்தா நோம்மைப்பற்றி எல்லா விஷயங்களையும் அறிஞ்சிறுப்பாய் பாரிஸ். இஞ்சப்பாருடா நமக்கெல்லாம் நோம்பு வெய்க்கத்தானடா லீவு தாராங்க. இந்தச் சலுகையை நாம விளையாட்டிலே கழிச்சா அது ஞாயம்தானாடா பாரிஸ்.

இப்போதான்டா பர்ஸான் நானும் நோம்மைப் பத்தி நல்லா புரிஞ்சிக்கிட்டேன். என்ட உம்மா வாப்பா கூட இப்படிசொல்லித் தரலையடா எப்படியும் நான் நாளைக்கி நோம்போடதான்டா இருப்பேன் பர்ஸான் மிச்சம் சந்தோஷம்டா பாரிஸ் நீ விளையாடப்போயிருந்தால் என்னிடம் வந்திருக்கவும் மாட்டாய், நோம்பின் அருமையை தெரிஞ்சிருக்கவும் மாட்டாய். உண்மைதான்டா!

இன்ஷா அல்லாஹ் நீ நாளைக்கி நோம்போட வா உனக்கு நல்லா குர்ஆன் ஓத பழக்கிறேன். செரிடா பர்ஸான் என்றவாறு தனது வீட்டையடைந்தான் பாரிஸ். என்னடா தம்பி இன்டைக்கி நேரத்தோட வந்திட்டே விளையாடப்போகலையாடா. இல்லே ராத்தா, நாளையிலே இருந்து நானும் நோம்பு பிடிக்கப்போறேன், விளையாடவெல்லாம் போகமாட்டோம்மா இனி.

என்டா இது! உனக்கு எப்போ மகன் இந்த நல்லலெண்ணமெல்லாம் வந்திச்சி என்று கதீஜா கேட்டதும் பாரிஸ் தனக்கு இதற்கு முன்னர் நடைபெற்ற அத்தனையையும் விபரமாகக் கூறினான் தாயாரிடம். உடனே தாயார் பாரிஸை இறுக அனைத்துக் கொண்டு அந்த மெளலவிக் காக்காட மகனுக்கு நல்ல வாழ்க்கையை அந்த அல்லாஹ் நாயன் கொடுக்கணும்.

நீ நோம்பு பிடிப்பியாப்பா பசி, தாகம் எல்லாம் தாங்கமாட்டாயே! இல்லேம்மா. நான் எப்படியும் நோம்பு பிடிப்பேம்மா நீங்கதான் பாருங்களேன். சரிப்பா நோம்பு புடிக்க இன்டைக்கி விடியக்காலத்திற்கு உன்னை எழுப்பிவிடுறேன். உனக்கு ஏலாம இருந்தா இடையிலே விட்டிடு மகன், நீ பச்சமண். தாங்கமாட்டாயப்பா. இல்லேம்மா எல்லாம் நம்ம மனசைப் பொறுத்திருக்கும்மா நான் நோம்பு புடிச்சே ஆகணும்.

நோன்பு நோற்ற பாரிஸ் அன்று காலையிலே வழமைக்கு மாறாக சிறிது தாமதமாகவே படுக்கையை விட்டெழுந்தான். காலை 10 மணியிலிருந்து தாய் சகோதரிமார்களுடன் சேர்ந்து அவர்கள் சுற்றிக் கொடுக்கும் பீடிகளுக்கு மிகவும் சந்தோஷகரமாக சிகப்பு நூலைக்கட்டிக் கொண்டிருந்தான்.

அஸர் தொழுகைக்குப் பின்னர் தாயார் கதீஜா பாரிஸைப் பார்த்து மகன் இன்றைய நோம்பு அனுபவம் எப்படியப்பா இருந்திச்சி என்றதும் இதுதானம்மா நோம்பு. பல தடவைகள் நாம் இப்படி பட்டினி கிடந்திருக்கோமே உம்மா! எப்போ மகன் இப்படி இருந்தோம்.

வாப்பா ஆஸ்பத்திரியிலே இருந்தபோது வீட்டிலே எதுவுமில்லையென்று சமைக்கவே இல்லையேயும்மா அப்போ பட்டினிதானே கிடந்தோம். அப்போ இருந்தது போலத்தாம்மா இருந்திச்சி நான் எல்லா நோம்பையும் பிடிப்பேம்மா என்று சொன்னதும்


என்ட செல்ல மகனே நீ எல்லாத்தையும் புரிஞ்சி வெச்சிருக்காய் மகன் என்றவாறு அவனை கட்டியணைத்து உச்சி முகர்ந்தாள் கதீஜா.
Previous
Next Post »

More News