மனிதனுக்கும்
மற்றும் உயிரினங்களுக்கும் இறையளித்த அருட்கொடை தாவரங்கள். தாவர பாகங்கள்’ உயிரின
உணவாகின்றன. உணவு, உடை, வீடு
மற்றும் வசதிகளைத் தாவர பாகங்கள் தருகின்றன.
எனவே பிரதான உணவை யும்
உடலுக்கு ஊட்டமளிக்கும் காய்கறி பழங் களையும்
பெற பண்டுதொட்டு மக்கள் பயிர்செய்கின்றனர்.
நமது நாட்டின் இயற்கை அமைப்பு, சுவாத்தியம்,
மண்வளம், நீர்வளம் என்பன பயிர்ச்செய்கைக்கு பொருத்தமானவை.
பருவகால மழை நீரும் பண்டைய
மன்னர்கள் கட்டிய குளங்களின் நீரும்
பயிர் செய்யப் பயன்பட்டன. உணவு
உற்பத்தியிலே நாடு தன்னிறைவு கண்டது.
நம் நாட்டு உணவுப் பொருட்கள்
பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகப் பண்டைய தமிழ் இலக்கிய
நூல்களில் சான்றுகள் உள்ளன.
நமது நாடு சுமார் 442 ஆண்டுகள்
அந்நியர் ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலத்தில்
உணவு மற்றும் உப உணவு,
காய்கறி உற்பத்திகள் பெரிதும் பாதிப்படைந்தன. உணவுப் பயிர் செய்த
விவசாயிகள் பிற நாட்டவரின் தேவையான
பணப்பயிர் விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோது
கோதுமை மா மற்றும் துணை
உணவுகள் இறக்குமதி செய்யப்பட்டதால் பிறநாட்டு உற்பத்தியில் இலங்கை தங்கி இருக்க
நேர்ந்தது.
நாடு சுதந்திரம் பெற்ற பின் மீண்டும்
உணவு உற்பத்திக்கு அரசு ஆக்கமளித்தது. மக்களும்
விருப்புடன் நெற்செய்கை, தோட்டச் செய்கையில் ஈடுபட்டனர்.
பாடசாலை மாணவர்களுக்குக் களைகட்டவும் பயிர் நடவும் பாடசாலைகள்
எங்கும் தோட்டச் செய்கையில் ஈடுபடவும்
பயிற்சி அளிக்கப்பட்டது. ஆயினும் ஆட்சி மாற்றத்தின்போது
வந்த அரசுகள் தாராள இறக்குமதி
என அனைத் துப் பொருட்களையும்
இறக்குமதி செய்ததால் உணவுச் செய்கை, தோட்டச்
செய்கைகள் கைவிடப்பட்டன.
தோட்டம்
செய்து வருமானமும் வேண்டிய காய்கறிகளும் பெற
முடியும் என்ற எண்ணமே அற்ற
ஒரு சமுதாயம் உருவாயிற்று. அதனால் இன்றைய இளைஞர்
பலருக்குத் தோட்டம் செய்யும் பயிற்சியே
இல்லாமல் போயிற்று.
ஆனால் இன்றைய அரசு உணவு
உற்பத்திக்கும் காய்கறி பழங்களின் உற்பத்திக்கும்
முன்னுரிமை அளித்துள்ளது. கிராமங்களில் மட்டுமன்றி நகரங்களிலும் கூட வெற்று நிலத்தைப்
பண்படுத்திப் பயன்தரும் பயிர்களை நட அரசு நடவடிக்கை
எடுத்து வருகின்றது.
அரசின்
உற்பத்திக் கொள்கைக்கமைய நாட்டு மக்கள் குறிப்பாக
இளைஞர்கள் ஓய்வு நேரத்தை வீட்டுத்தோட்டங்களில்
பயிர் செய்வதை கட்டாய முயற்சியாகக்
கொள்ள வேண்டியது காலத்தின் தேவையெனக் கருதப்படுகின்றது. பெருகி வரும் சனத்தொகையால்
வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. வீட்டுத்
தோட்ட வருமானம் கணிசமான அளவு வாழ்க்கைச்
செலவைக் குறைக்கும் என விதந்துரைக்கப்படுகிறது.
நமது கிராமங்களில் உள்ள வீட்டு வளவுகளை
உற்பத்திக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது சில காட்சிகள் நம்மைச்
சிந்திக்க வைக்கின்றன. ஒரு வீட்டு வளவிலே
உட்சென்றவுடன் நரி இலந்தை எனும்
முள்மரமே நம்மை வரவேற்கிறது. சுற்றிப்பார்க்கும்
போது எருக்கலை, பூலா, இபில்இபில் முதலிய
சிறுமரங்களும் தகரை, வெட்டொட்டி, நெருஞ்சி,
தொட் டாற் சுருங்கி, குப்பைமேனி
முதலிய காட்டுச் செடிகளும் பொன் விளையும் பூமியை
ஆக்கிரமித்துள்ளதைக் காணலாம்.
எல்லை வேலிகளைப் பயனற்ற கொடிகள் மூடியுள்ளன.
காட்டுச் செடிகளை அகற்றி கச்சானும்
கெளபியும் சோளம், இறுங்கு, உழுந்து,
பாசிப்பயறும் செய்கை பண்ண முடியாதா?
நிச்சயமாக முடியும். இறைவன் நமக்களித்த வளம்,
நமது வளவிலே இருக்கிறது. ஆனால்
நமக்கு முயற்சி இல்லை. பயிர்ச்
செய்யக் கூடிய பயிற்சியும் இல்லை.
இத்தகைய பயன்தரும் பயிர்கள் நமது வளவுகளை அலங்கரித்தால்
எத்தனை பயன் கிடைக்கும் என்பதை
எண்ணிப்பார்க்க வேண்டும்.
வேலியோரம்
முருங்கை, அகத்தி நட முடியும்.
கிணற்றின் அண்மையில் தோடை, எலுமிச்சை, கொய்யா
நடமுடி யும். 10, 15 அடி வாழை ஏன்
நமது வளவில் இருக்கக் கூடாது.
நரி இலந்தையை அகற்றி அந்த இடத்தில்
மாவும் பலாவும் ஏன் நடக்
கூடாது என்பதை இன்றாவது எண்ணிப்பார்ப்போம்.
வேலி மூடியுள்ள காட்டுக்கொடிகள் உள்ள இடத்திலே பயறும்
பாகலும் பாடவரையும் காய்த்துத் தொங்கினால் எத்தனை மகிழ்ச்சியுடன் காய்
பறிப்போம்.
ஓய்வு நேரங்களிலே நமது இளைஞர்கள் மட்டுமன்றிப்
பெரியவர்களும் கூட விழுந்த மரங்களிலும்
தந்திக் கம்பித்தூண்களிலும் குந்தி இருந்து அரட்டையடித்து
வீண் பொழுது போக்கும் நேரத்தை
வீட்டுத் தோட்டத்தில் செலவிட்டால் வருமானம் மட்டுமன்றி விரும்பிய காய்கறிகளை உண்டு களிக்க முடியும்.
என்பதை எண்ணிப்பார்க்க வேண்டாமா?
நாம் துருவப்பிரதேசங்களிலோ நீரற்ற, மரமற்ற, கொடியற்ற
பாலைவனத்திலோ வாழ்ந்தால் தோட்டம் செய்யச் சாத்தியமில்லை.
மழைவீழ்ச்சி, சிறந்த காலநிலை, பதமண்,
நிலக்கீழ் நன்னீர் குழாய் மூலம்
நீர் பெறும் வசதி அத்தனை
அதிர்ஷ்டங்களையும் வைத்துக் கொண்டு காய்கறிச் செய்கையிலே
கடுகளவும் ஆசையின்றி அக்கறையின்றி, ஆர்வமின்றி இளமையைப் பாழடிப்பது நமக்கும் நஷ்டம் நாட்டுக்கும் நஷ்டம்
என்பதைக் குறிப்பாக இளைஞர்கள் உணர்ந்து செயல்படுவது நன்மை பயப்பதாகும்.
நமது வளவிலே இயற்கை வளம்
இருக்கிற மனிதவளம் நம் உடலில் இருக்கிறது.
இயற்கை வளமும் மனிதவளமும் ஒன்றிணைந்தால்
அற்புதமான உற்பத்தி பிறக்கும் என்பதை எண்ணிச் செயல்படுதல்
நன்று.
நமது வீட்டுத்தோட்டம் குடும்ப உறுப்பினரின் கூட்டுமுயற்சியாக
அமைய வேண்டும். பிள்ளைகளுக்கு வயதுக்கேற்பச் சில பொறுப்புகளைக் கொடுக்கலாம்.
தமக்குரிய பிணியைச் சரியாக நிறைவேற்றும் பொறுப்புணர்ச்சியை
அவர்கள் இளமையிலே பெற வீட்டுத்தோட்டம் வாய்ப்பளிக்கும்.
ஒற்றுமை, பாந்தவ்விய மனப்பாங்கைப் பெற்றோர் பிள்ளைகள் பேணவும் இம்முயற்சி உதவுகிறது.
நமக்கென
ஒரு வீட்டுத்தோட்டம் இருந்து பயன் தந்தால்
விரும்பிய காய்கறிகளை இன்றும் தாராளமாக உண்ணலாம்.
இன்று பசளி, நாளை தோட்டக்கீரை,
மறுநாள் முருங்கை, அகத்தி எனத் தெரிவு
செய்து விரும்பியதை உண்ணமுடியும்.
வீட்டிலே
காய்கறி கிடைத்தால் அம்மா காய்கறி வியாபாரியைத்
தலை வாசலிலே எதிர்பார்த்து நின்று
நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை. மரக்கறியும்
பழமும் வாங்க அரைமைல் தூரம்
மரக்கறிக்கடைக்குச் செல்ல வேண்டியதில்லை. பல்வேறு
இடங்களிலும் ஏற்றி இறக்கி அடிபட்ட
காய்ந்த கத்திரிக்காயையும் முற்றிய வெண்டிக்காயையும் கிலோ
100/= ரூபாவுக்கு வாங்க வேண்டியதில்லை.
வாழ்க்கைச்
செலவு நாளுக்கு நாள் உயர்ந்து வரும்
இந்தக் காலத்திலே உழைப்பின் கணிசமான தொகையை மரக்கறிக்கும்
பழங்களுக் கும் செலவிட வேண்டிய
தில்லை.
50 ரூபாவுக்கு
மரக்கறி வாங்கிச் சமைத்து குடும் பத்தவர்
9 பேருக்கு பகிர்ந்தளிப்பதில் உள்ள கஷ்டம் வீட்டு
அம்மாவுக்குத்தான் தெரியும்.
வீட்டில்
விளைந்த மரக் கறியாயின் ஏராளமாகச்
சமைத்துத் தாராளமாகப் பகிர்ந்தளிக்க முடியும். சுற்றாடல், விவசாய படங்களில் தாவர
இலைகள் பூக்களின் படங்களை நூல்களில் கண்டு
இனங்கண்ட மாணவர்கள் நேரடியாகவே தாவரபாகங்களையும், காய்கள் பழங்களையும் காணவும்
சுவைக்கவும் வீட்டுத்தோட்டம் உதவும்.
முயற்சிக்கும்
உடல் உழைப்புக்கும் நற்பயன் உண்டு என்பதைச்
சிறு வயதினரும் பெரியவர்களும் அறிந்து உணர்ந்து செயல்பட
வீட்டுத்தோட்டம் அமைப்பதே சிறந்தது. வித்துக்களை நடுதல், கன்றுகளை நடுதல்,
களை பிடுங்கல், பசளையிடல், கைகளினால் பீடையகற்றுதல், இயற்கையான பீடை கொல்லிகளைப் பயன்படுத்தல்,
நிலத்தைப் பண்படுத்தல், பாத்திகளை அமைத்தல் போன்ற விவசாய முயற்சியின்
அம்சங்களை இளமையில் செய்கை மூலம் கற்று
வாழ்வில் சிறப்புற வீட்டுத்தோட்டம் வழிவகுக்கும்.
சில கிராமங்களில் 100க்கு 90 சதவீதமான வளவுகளில்
வீட்டுத்தோட்டம் இல்லை. காய்கறிச் செடிகளை
நாடாது வீட்டைச் சுற்றிக் குரோட்டன் செடிகளை வைத்து நீர்
ஊற்றுகிறார்கள். குரோட்டன் செடிகளால் மரக்கறிகளும் கீரைகளும் தரும் பயனை பெற
முடியுமா? குரோட்டனை வளர்க்கும் நிலத்தில் கீரைப்பாத்திகளையோ வெண்டி, பசளி போன்ற
பயன்தரும் செடிகளை வளர்த்தால் பயன்
கிடைக்கும்.
நவீன முறையில் வீட்டுத்தோட்டம் செய்வது தொடர்பாக விவசாய
இலாக்காவின் அனுசரணையுடன் கன்னோருவ விவசாய தொழில்நுட்ப வளாகம்
2004ஆம் ஆண்டில் இருந்து ஆலோசனையும்
பயிற்சியும் வழங்கி வருகின்றது.
நவீன விஞ்ஞான ஆய்வுகளின்படி ஐந்து
நிறமான மரக்கறி வகைகள் நமக்கு
ஏற்படும் ஆபத்தான நோய்களைக் கட்டுப்படுத்தவல்லன
என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வெள்ளை, ஊதா, மஞ்சள்,
பச்சை, சிவப்பு நிறச் சதையுள்ள
காய்கறிகளும் கிழங்குகளும் பழங்களும் இயற்கை இரசாயனப் பொருட்கள்
பொதிந்தவை. இவ்விரசாயனப் பொருட்கள் புற்றுநோய், நீரிழிவு, குருதி அழுத்தம், இதய
நோய்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் சக்தி பெற்றுள்ளன என
அறிய முடிகிறது. எனவே நமது வீட்டுத்
தோட்டத்தில் குறிப்பிட்ட ஐந்து நிறச் சதை
பொதிந்த காய்கறி, கிழங்கு, கீரை, பழங்களை நாம்
பயிரிடுவது நமது ஆரோக்கிய வாழ்வுக்கு
அவசியமானது.
நமது வளவிலே மழை நீர்
கட்டுப்பட்டு நிலை கொள்ளாது வழிந்தோடக்கூடிய
பதமண்பகுதியில் வீட்டுத் தோட்டம் அமைக்கலாம். நீர்
தேங்கி நின்று ஓடும் பகுதிளில்
நீர்க்கட்டைத் தாங்கக்கூடிய வாழை, கொய்யா போன்றவற்றை
நட்டுப் பயன்பெற முடியும்.
சில கிராமங்களில் வாழைப்பழம் குறைவு. வியாபாரியிடம் கேட்டபோது
யாழ்ப்பாணத் தில் இருந்து இன்னும்
பழம் வரவில்லை என்றார். இத்தனை இடப்பெயர்வு துன்பங்களின்
மத்தியில் யாழ் விவசாயிகள் பயிர்
செய்து பழங்களை வேறு பிரதேசங்களுக்கு
அனுப்புவதை எண்ணும்போது அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டாமா
எனத் தோன்றுகிறது.
பறித்த
காய்கறிகளை ஒரு கூட்டை நிறைய
வைத்து அதைப் பார்க்கும்போது நமக்கு
பெருமிதமும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. எனவே வீட்டில் தோட்டம்
அமைப்போம். விரும்பிய காய்கறிகள் உண்போம். மனநிறைவும் உடற்படலமும் பெறுவோம். முயற்சியுள்ள புத்திசாலிகளாக வாழ்வோம்.
உழவுக்கும்
தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டு களிப்போரை திருத்த முயல்வோம்.
ConversionConversion EmoticonEmoticon