காலையில்
பிள்ளைகளை பாடசாலை வேனில் ஏற்றிய
பின்னர் தையல் மெசின் முன்னால்
அமர்ந்து முதல் நாள் இரவு
அழகாக அளவுக்கு வெட்டிய ஆடைகளை தைக்கும்
பணியை ஆரம்பித்த கெளரி பகல் 3 மணியளவில்
பாடசாலை வேனில் வந்திறங்கிய தனது
மூன்று பிள்ளைகளையும் பார்த்தவுடன் தையலை நிறுத்திவிட்டு அவர்களுக்கு
பகல் உணவை பரிமாறினாள்.
கடைக்குட்டி
சுரேஷ¤க்கு 6 வயதாகும். அவனுடைய
வகுப்புக்கள் 12.30க்கு முடிவடைந்தாலும் அக்காவினதும்,
அண்ணாவினதும் வகுப்பு முடிவடையும் வரை
அவன் பாடசாலையில் மற்ற பிள்ளைகளுடன் ஓடி
விளையாடி பொழுதைக் கழிப்பான். அம்மா சுற்றிக் கொடுக்கும்
பனிசையும், வாழைப்பழத்தையும் சாப்பிட்டு தண்ணீர் போத்தலில் உள்ள
தண்ணீரை 11.00 மணி இடைவேளையின் போது
குடித்துவிடும் சுரேஷிற்கு வீட்டுக்கு வரும் வரை பசியே
எடுப்பதில்லை.
வீட்டுக்கு
வந்தவுடன் அவன் அம்மாவின் சேலை
முந்தாணியைப் பிடித்துக் கொண்டு வாலைப் போல்
சுற்றுவான். அண்ணா ரமேஷிற்கும், அக்கா
சுசிலாவுக்கும் அம்மா சோறை தட்டில்
போட்டுக் கொடுத்த பின்னர் அவன்
அம்மாவின் மடியில் அமர்ந்து அவள்
சோறூட்டும் வரை அடம்பிடிக்காமல் காத்திருப்பான்.
அன்றும்
பிள்ளைகள் வந்தவுடன் அவர்களுக்கு உணவு பரிமாறும் பணியில்
ஈடுபட்டுக் கொண்டிருந்த கெளரி சோர்வடைந்த நிலையில்
இருப்பதை 14வயதான மூத்தவள் சுசிலா
அவதானித்துவிட்டாள். “அம்மா உங்களுக்கு என்ன
வயிற்று வலிக்கிறதா?” என்று மகள் கேட்டவுடன்
சோர்வடைந்த நிலையில் இருந்த கெளரி, “போடி
உனக்கென்ன விசரே? உனக்கு வருவது
போன்று எனக்கு அடிக்கடி வயிற்று
வலி வருவதில்லை”. என்று பதிலளித்தாள்.
“அப்பா
புத்தாண்டை எங்களுடன் கொண்டாடுவதற்காக ஒரு வாரம் லீவு
எடுத்துவிட்டு வரப்போகிறேன் என்று இரண்டு நாட்களுக்கு
முன்னர் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார். அதற்குப் பின்னர் அவரும் தொலைபேசியில்
பேசவில்லை. நான் எடுத்த அழைப்புக்களுக்கும்
மறுமுனையில் எவரும் பதில் அளிக்கவுமில்லை.
அதனால்தான் சற்று சஞ்சலமாக இருக்கிறது”
என்று கெளரி தன்னிடம் சிநேகிதியைப்
போன்று மிகவும் நெருக்கமாகப் பழகும்
மகளிடம் கூறினாள்.
அக்காவுக்கும்
அம்மாவுக்கும் இடையில் நடந்து கொண்டிருந்த
இந்த சம்பாஷனையை கேட்டுக் கொண்டிருந்த இரண்டாவது மகன் ரமேஷ் அப்பா
வரமாட்டாரா? என்ற சந்தேகம் இதன்
மூலம் அவன் மனதில் எழுந்தது.
அப்பா வராவிட்டால் நான் எப்படி என்னுடைய
அயல் வீட்டு நண்பர்களுடன் பட்டாசு
கொளுத்தி புத்தாண்டை மகிழ்ச்சியோடு கொண்டாட முடியும். யார்
எனக்கு பட்டாசு வாங்கித் தருவார்
என்ற வேதனையில் அப்படியே அமர்ந்து சிந்திக்க ஆரம்பித்தார்.
ன்னுடைய
இரண்டு தம்பிமாருடன் அன்பாக பழகும் சுசிலா
ரமேஷின் முகபாவங்களை இலகுவில் அறிந்து கொள்ளக்கூடிய திறமைசாலியாக
இருந்தாள். அதனால் அவள் ரமேஷிற்கு
அருகில் சென்று அமர்ந்து. “ரமேஷ்
நீ பயப்படாதே, அப்பா போன மாதம்
இங்கு வந்து போன போது
எனக்கு 300 ரூபாவை பொக்கட் மணியாக
கொடுத்தார். அதில் நான் 50 ரூபாவை
மாத்திரமே செலவிட்டேன். என்னிடம் 250 ரூபா மிச்சம் இருக்கிறது.
அது சரி ரமேஷ், உனக்கு
அப்பா கொடுத்த 250 ரூபாவுக்கு என்ன வாங்கினாய்?” என்று
சுசிலா கேட்ட போது ரமேஷ்
மென்று விழுங்கி “அக்கா நானும் என்
நண்பர்களும் பக்கத்து தோசைக்கடைக்குப் போய், ஒரு பிடி
பிடித்தோம். காசு முழுதும் காலியாவிட்டது”
என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தான்.
“தம்பி
ரமேஷ் இனிமேலாவது நீ கொஞ்சம் சிக்கனமாக
செலவு செய்து காசை சேமிக்கப்பார்.
காசை சேமித்தால் அவசர தேவைக்கு அதனைப்
பயன்படுத்தலாம்” என்று சொன்ன சுசிலா
சரி நான் உனக்கு அப்பா
வருவது தாமதமானால் பட்டாசு வாங்க 200 ரூபாவையும்
தம்பிக்கு நிலா வாங்க 50 ரூபாவையும்
தருகிறேன். இப்போது அம்மா அப்பா
வராத வேதனையில் இருக்கிறாங்க, அதனால இதைப் பத்தி
அம்மாவுக்கு சொல்லி அம்மாவுக்கு எரிச்சல்
ஏற்படுத்தாதே.” என்று கூறிவிட்டு சுசிலா
தன் பாடப் புத்தகங்களுடன் தனது
அறைக்கு சென்றுவிட்டாள்.
அன்று வெள்ளிக் கிழமை நாளை மறுதினம்
புத்தாண்டு பிறக்கப்போகிறது. பாடசாலை விடுமுறை என்பதனால்
பிள்ளைகள் அன்று வீட்டில் இருந்தார்கள்.
பொதுவாக புத்தாண்டுக்கு முன்னர் அம்மா கெளரி
வீட்டைப் பெருக்கி ஒட்டறை அடித்து வீட்டை
சுத்தமாக்கிய பின்னர் வீடு முழுவதையும்
கழுவி வீட்டு முற்றத்தை சாணத்தினால்
மெழுகி வீட்டைத் தூய்மைப்படுத்துவாள். அதற்கு முன்னர் வீட்டில்
உள்ள அழுக்கடைந்த ஆடைகளை சலவைத் தொழிலாளியை
அழைத்து கொடுத்துவிடுவாள்.
இதுதான்
பொதுவாக புத்தாண்டு ஓரிரு தினங்களுக்கு முன்னர்
கெளரியின் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளாகும். சனிக்கிழமையன்றும் நுவரெலியாவில் உள்ள பொலிஸ் நிலையம்
ஒன்றில் இன்ஸ்பெக்டர் தொழில் பார்க்கும் கணவர்
சந்திரசேகரன் வீட்டுக்கு வராததனாலும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளாததாலும் ஆத்திரமும்
வேதனையும் அடைந்த நிலையில் பிள்ளைகளுக்குக்
கூட தெரியாதவாறு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.
தாய்படும்
வேதனையை புரிந்து கொண்ட சுசிலா அம்மா
செய்யவேண்டிய வேலைகளை தானே சனிக்கிழமை
காலை முதல் செய்ய ஆரம்பித்தாள்.
தம்பி ரமேஷை அழைத்து வீட்டில்
சலவை செய்ய வேண்டிய தங்கள்
மூவரின் சீருடைகளையும் கட்டில் விரிப்புகள், ஜன்னல்
திரைச்சேலைகளையும் எடுத்து அடுத்த வீதியில்
உள்ள சலவைத் தொழிலாளியின் வீட்டில்
கொண்டு போய் ஒப்படைக்குமாறு கேட்டுக்
கொண்டாள்.
அதற்குப்
பின்னர் அக்காவும் தம்பியும் வீட்டில் ஒட்டறை அடித்து வீட்டை
நன்றாக பெருக்கி வீட்டைக் கழுவினார்கள். அப்போது சுட்டிப் பயல்
சுரேஷ் தண்ணீரில் ஓடி விளையாடி வழுக்கி
விழுந்து தலையில் ஏற்பட்ட புடைப்பினால்
அவன் அழுது கொண்டே அம்மாவின்
மடியில் படுத்துவிட்டான்.
இந்த நேரத்தில் தம்பிக்கு எதுவும் நடந்துவிடக்கூடாது என்று
படபடத்த நிலையில் சுசிலா சமையலுக்குச் சென்று
சுடுசாம்பலை ஒரு சீலையில் கெட்டியாக
கட்டி தம்பியின் புடைத்த நெற்றியில் ஒத்தடம்
கொடுத்தாள். தனது மகளின் பொறுப்பான
பணிவிடையைப் பார்த்த அம்மா கெளரிக்கு
மனம் குளிர்ந்து போய் விட்டது.
“சுசிலா
நீ காலையில் இருந்து கஷ்டப்படுகிறாய், போய்
ஓய்வெடுத்துக் கொள் நான் வீட்டு
வேலைகளைப் பார்க்கிறேன்” என்றாள். “அம்மா, அப்பா நிச்சயம்
இன்றிரவு அல்லது நாளைக் காலையில்
இங்கு வரத்தான் போகிறார். ஆகவே நாம் அவருக்கு
நல்ல வரவேற்பை அளிக்க வேண்டும். நான்
வீட்டு வேலைகளைக் கவனிக்கிறேன். நீங்கள் பலகாரம் மற்றும்
கொக்கிஸ் போன்ற இன்சுவை உணவுகளை
தயாரியுங்கள்” என்று தாயைப் பார்த்து
சற்று கடினமான குரலில் கூறினாள்.
தனது மகளின் பொறுப்புணர்வை பார்த்து
மெச்சிக் கொண்ட தாய் கெளரி
“சரி இவள் சொல்வதை செய்வோம்,”
என்று சமையலறைக்கு சென்று பலகாரம் சுடும்
பணியை ஆரம்பித்தாள்.
தாயார்
சமையலறையில் சுமார் 4, 5 மணித்தியாலங்கள் பலகாரம் சுடுவதைப் பார்த்து
உள்ளூர சுசிலாவும், ரமேஷ¤ம் மகிழ்ச்சி
அடைந்த நிலையில் வீட்டு முற்றத்தை சாணத்தினால்
மெழுகி பூஜை அறைக்குச் சென்று
விளக்கு போன்றவற்றை புளி போட்டு தேய்த்து
பளபளக்கச் செய்து, எண்ணெய், புது
திரிகளையும் தயார் நிலையில் வைத்து
காலையில் பூஜை செய்வதற்கு பூஜை
அறையை தயார்படுத்தினர்.
வேலையெல்லாம்
முடியும் போது சனிக்கிழமை இரவு
2 மணியாகிவிட்டது. கணவன் வருவார் வருவார்
என்று கெளரி நித்திரையின்றி கண்ணீர்
விட்டவாறு காத்திருந்தாள். அவளது 3 பிள்ளைகளும் சோர்வடைந்த
நிலையில் தாய்க்கு அருகில் பாயைப் போட்டு
நித்திரையில் ஆழ்ந்து விட்டனர்.
அப்போது
காலை 6.45 மணி அயல் வீடுகளில்
பட்டாசு கொளுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
தெருக்கோடியில் உள்ள முருகன் கோவிலில்
இருந்து மணியோசை கேட்டுக் கொண்டிருந்தது.
அவ்வேளையில் வேகமாக வந்த ஒரு
பொலிஸ் வேன் அவர்கள் வீட்டுக்கு
முன்னால் நின்றது.
உடனே கெளரி ஆவலோடு கதவைத்
திறந்து கொண்டு பிள்ளைகளோடு ஓடி
வந்தாள். வானில் இருந்து இரண்டு
பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இறங்கி வந்தார்கள். “இன்ஸ்பெக்டர்
ஐயா எங்கே?” என்று கெளரி
அழுது புலம்பினாள்.
அம்மா பயப்படாதீர்கள், இதோ ஐயா வருகிறார்
என்று சந்திரசேகரனை அந்தப் பொலிஸ் காரர்கள்
கைலாக்காக பிடித்து வீட்டுக்குள் கொண்டு வந்தனர். உங்களுக்கு
என்ன நடந்தது என்று அவள்
மனைவி அழுதபோது ‘‘ஒன்றும் நடக்கவில்லை, நான்
வரும் வழியில் என் மோட்டர்
சைக்கிள் விபத்துக்கு உள்ளானது. காலில் சிறு காயம்
ஏற்பட்டதனால் என்னால் உடனடியாக வர
முடியவில்லை, எலும்பு முறிவு இல்லை
தசைதான் பிரண்டு இருக்கிறது. இப்போது
எண்ணெய் பூசுகிறேன்’’ என்று கணவர் சந்திரசேகரன்
புலம்பிக் கொண்டிருந்த மனைவிக்கு ஆறுதல் கூறினார்.
அப்பாவும்
அம்மாவும் வீட்டில் பேசிக் கொண்டிருந்த போதிலும்
பிள்ளைகள் மூவரும் பொலிஸ் வானுக்குள்
சென்று அப்பா கொண்டு வந்த
மூன்று பெரிய பொதிகளை தூக்கிக்
கொண்டு வந்தார்கள். அதில் அப்பா பிள்ளைகளுக்கு
பட்டாசு, நிலாகூறுகள் போன்றவற்றையும் தின்பண்டங்களையும் மூன்று பிள்ளைகளுக்கும் ஆடைகளையும்
கொண்டுவந்திருந்தார்.
இதைப் பார்த்து சற்று ஏமாற்றம் அடைந்த
மனைவி கெளரி “எனக்கு ஒன்றும்
கொண்டு வரவில்லையா? எனக்கு புத்தாண்டுப் பரிசு
இல்லையா?” என்று கேட்டாள். “கெளரி
நான் பத்து நாட்கள் லீவில்
வீட்டில் உன்னோடு தங்கப் போகிறேன்.
அதுதான்
நான் உனக்குக் கொண்டு வந்த புத்தாண்டுப்
பரிசு” என்று சந்திரசேகரன் சொன்னபோது
பிள்ளைகள் ஆனந்தத்தில் மூழ்கி அப்பாவையும் அம்மாவையும்
கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.
சரி பிள்ளைகளே, ஸ்நானம் செய்து புத்தாடை
களை அணிந்து தயாராகுங்கள் நாங்கள்
கோயி லுக்குப் போய் வருவோம் என்று
சந்திரசேகரன் எல்லோருக்கும் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துவிட்டு சிரித்துக்
கொண்டே நாற்காலியில் அமர்ந்தார்.
ConversionConversion EmoticonEmoticon