மற்றவர்களையும் நம்மை போல் மதிப்போம் (சிறுவர் கதை)



செல்லப் பிராணிகளை விற்பனை செய்யும் கடைக்குச் சென்றான் அந்தச் சிறுவன். பல அழகிய நாய்க்குட்டிகள் அங்கே விற்பனைக்கு இருந்தன. விலை 500 ரூபாய் என்றார் கடைக்காரர். கடையின் ஒரு மூலையில் நாய்க்குட்டி ஒன்று தனியாக இருப்பதைப் பார்த்தான் அவன்.

"இது மட்டும் ஏன் தனியாக இருக்கிறது? இது விற்பனைக்கு இல்லையா?'' என்று கேட்டான் சிறுவன்.

"இது உடற் குறைபாடுள்ள குட்டி. ஒரு கால் இல்லாமலேயே பிறந்தது. ஆகவே இது விற்பனைக்கு இல்லை'' என்றார் கடைக் காரர்.

அந்தக் குட்டியைத் தூக்கி விளையாடிய சிறுவன், தனது பையில் இருந்து 500 ரூபாயை எடுத்து நீட்டினான். "இந்தக் குட்டியை வாங்கிக் கொள்கிறேன்'' என்றான்.

"இது விற்பனைக்கு இல்லை என்று சொன்னேனே! நீ வேறு நல்ல குட்டியை வாங்கிக் கொள்ளலாமே. கால் ஊனமான இந்த நாய்க்குட்டியை ஏன் தேர்ந்தெடுத்தாய்?'' என்றார் கடைக்காரர்.

சிறுவன், தான் அணிந்திருந்த கால் சட்டையின் கீழ்ப் பகுதியைத் தூக்கிக் காட்டினான். அங்கு அவனுக்கு மரத்தாலான ஒரு கால் இருந்தது.

உடற் குறைபாடு உள்ள சிறுவன், தன்னைப் போலவே ஒரு கால் இல்லாமல் இருந்த நாய்க்குட்டியின் உணர்வுகளையும் துயரங்களையும் புரிந்து கொள்ளும் பெரிய மனம் படைத்திருந்தான் என்பதே இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.

நீதி:- மற்றவரது இடத்தில் நம்மை வைத்து, அவர்களது பிரச்னைகளையும் துன்பங்களையும் புரிந்து கொள்ளும் மனமும் திறனும் நமக்கு வேண்டும்
Previous
Next Post »

More News