மகளிர்
இருபது – 20 உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து
அணியை 04 ஓட்டங்களால் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி தனது உலக
சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
கொழும்பு
ஆர். பிரேமதாச அரங்கில் நேற்று பகல் 2.30 மணிக்கு
ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற
இங்கிலாந்து அணித் தலைவர் சார்லட்
எட்வட்ஸ் அவுஸ்திரேலியாவை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார்.
இதில் அவுஸ்திரேலியா - இங்கிலாந்து மகளிர் அணிகள் உலகக்
கிண்ண இறுதிப் போட்டி ஒன்றில்
1988 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒன்றை ஒன்று
எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில்
துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆஸி. அணி வழமையை
விடவும் சிறப்பாக செயற்பட்டது. ஆரம்ப விக்கெட்டுக்காக மெக்
லெனின்ங் மற்றும் அலிஸா ஹிலி
ஆகியோர் 41 பந்துகளில் 51 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்து கொண்டனர். லெனின்ங் 24 பந்துகளில் 4 பெளண்டரிகளுடன் 25 ஓட்டங்களுடனும் ஹிலி 25 பந்துகளில் 3 பெளண்டரிகளுடன்
26 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதனைத்
தொடர்ந்து வந்த ஜெஸ் கமரூன்
அபாரமாக செயற்பட்டார். 34 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 5 பெளண்டரிகளும் ஒரு
சிக்ஸரும் அடங்கலாக 45 ஓட்டங்களை விளாசினார். இதில் கமரூன், லிசா
செனலகருடன் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக
55 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார். இதன் போது செலகர்
26 பந்துகளில் ஒரு பெளண்டரியுடன் ஆட்டமிழக்காது
23 ஓட்டங்களை பெற்றார்.
இதன் மூலம் ஆஸி. மகளிர்
அணி 20 ஓவர்கள் முடிவில் 4 பெளன்டரிகளுடன்
142 ஓட்டங்களை பெற்றது. மகளிர் உலகக் கிண்ண
வரலாற்றில் 143 ஓட்டத்தை விடவும் கூடுதலான இலக்கை
எட்டி இதுவரை மூன்று தடவைகளே
அணியொன்று வெற்றியீட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து
சார்பில் 6 வீராங்கனைகள் பந்து வீசினர். எனினும்
ஹொலி கொல்வின் 4 ஓவர்களுக்கும் 21 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியதோடு டானியல் ஹஸல் 4 ஓவர்களுக்கும்
23 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்நிலையில்
சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாட
களமிறங்கிய இங்கிலாந்து அணி ஓட்டங்களை வேகமாக
குவிக்க தடுமாறியது. இதனால் இங்கிலாந்து அணி
20 ஓட்டங்களுக்கே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.
லோரா மார்ஷ் 14 பந்துகளில் 4 பெளண்டரிகளுடன் 8 ஓட்டங்களை பெற்று வெளியேறினார்.
மறுபுறத்தில்
சிறப்பாக ஆடிவந்த அணித் தலைவர்
சார்லொட் எட்வட் 23 பந்துகளில் 4 பெண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கலாக
28 ஓட்டங்களை பெற்ற நிலையில் கலகரின்
பந்துக்கு பெர்த்தியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த சாரா டெய்லர்
16 பந்துகளில் 2 பெளண்டரிகளுடன் 19 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். தொடர்ந்து
லிடியா கிரீன்வே 10 பந்துகளில் 4 ஓட்டங்களுடனும் அர்ரன் பிரின்டல் 12 பந்துகளில்
2 பெளண்டரிகளுடன் 13 ஓட்டங்களுடனும் வெளியேறினார்.
இறுதியில்
இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்களுக்கும்
09 விக்கெட்டுகளை இழந்து 138 ஒட்டங்களை பெற்றது. அவுஸ்திரேலியா சார்பில் அபாரமாக ஆடிய ஜெஸ்
கமரூன் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை
பெற்றார். தொடர் நாயகன் விருது
இங்கிலாந்தின் தலைவர் எட்வட்சுக்கு கிடைத்தது.
இதன் மூலம் அவுஸ்திரேலிய மகளிர்
அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் உலகக் கிண்ண இருபது
20 போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஆஸி.
அணி நியூசிலாந்தை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை வென்றது.
எனினும் இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக
உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு தனது
சொந்த மண்ணில் நடந்த உலகக்
கிண்ணத்தை இங்கிலாந்து கைப்பற்றியது.
ConversionConversion EmoticonEmoticon